Published : 19 Jul 2020 06:59 AM
Last Updated : 19 Jul 2020 06:59 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் முரண்பட்ட தகவல்- தேர்வுத் துறை மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

சென்னை

பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை விவர அறிவிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம்நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இம்மாதம் 16-ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 7.9 லட்சம்மாணவர்கள் தேர்வு எழுதியதில் 92.3 சதவீத பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்கள் முரண்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டின்போது அதுதொடர்பான புள்ளிவிவரப் பகுப்பாய்வு அறிக்கையை தேர்வுத் துறை வெளியிடுவது வழக்கம். அதில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை மற்றும்தேர்ச்சி வீதம், மாவட்ட வாரியானதேர்ச்சிப் பட்டியல் உள்ளிட்டவிவரங்கள் குறிப்பிடப்பட்டிருக் கும்.

அதன்படி, தற்போது வெளியான பகுப்பாய்வு அறிக்கையில் பிளஸ் 2 தேர்வு எழுத பள்ளிமாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களாக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 99,717 என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பிளஸ் 2 தேர்வு தொடங்கும் முன் கடந்த பிப்.27-ல் தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களாக 8 லட்சத்து 20,567 பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்துள்ளது.

இவ்விரண்டு தகவல்களுக்கு இடையேயான மாணவர்கள் எண்ணிக்கையில் 20,850 வரை வித்தியாசம் ஏற்படுகிறது. இதனால் அந்த மாணவர்கள் நிலை குறித்து கேள்விகள் எழுகின்றன.

அதேபோல், பிப்.27-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னையில் இருந்து மொத்தம் 47,264மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஜூலை 16-ல் வெளியானஅறிக்கையில் 45,646 பேர் மட்டுமேதேர்வு எழுதியதாக கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் 1,618 பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கல்வித்துறையே ஒப்புக்கொள்கிறது.

தலைநகரிலேயே 1,618 மாணவர்கள் தேர்வெழுதாமல் இருப்பதற்கான காரணமும் சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு தேர்வுத் துறை வெளியிட்ட மேற்கண்ட அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள தகவல்களில் பல்வேறுமுரண்பாடுகள் உள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். இந்த தகவல்கள் சரியாகஇருக்கும்பட்சத்தில் விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுதாமல் இடைநிற்பதற்கான காரணத்தை அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தை கல்வித்துறை எளிதாக கடந்துவிடக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x