Last Updated : 17 Jul, 2020 01:17 PM

 

Published : 17 Jul 2020 01:17 PM
Last Updated : 17 Jul 2020 01:17 PM

கட்டாய இணைய வழித் தேர்வுக்கு எதிர்ப்பு- யுஜிசி உத்தரவு நகல் புதுச்சேரியில் 3 இடங்களில் எரிப்பு

கட்டாய இணைய வழித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து யுஜிசி உத்தரவு நகலை எரிக்கும் போராட்டம் புதுச்சேரியில் 3 இடங்களில் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயமாக தேர்வை நடத்த உத்தரவிட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் முந்தைய பருவத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இச்சூழலில் இந்திய மாணவர் சங்கத்தினர் புதுச்சேரி பிரதேசக் குழு அலுவலகம் முன்பாக யுஜிசி உத்தரவு நகலை எரித்தனர். அதேபோல் பாகூர், மதகட்டிப்பட்டிலும் நகல் எரிப்புப் போராட்டம் நடந்தது.

இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் ஜெயபிரகாஷ், செயலாளர் விண்ணரசன், பிரதேசக் குழு உறுப்பினர்கள் தரணி, வந்தனா, செம்மலர், செந்தமிழ், ஸ்டீபன் ராஜ், வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், ‘’புதுச்சேரியில் 3 இடங்களில் யூஜிசி உத்தரவு நகல் எரிப்புப் போராட்டம் நடந்தது. இணைய வழித் தேர்வு அநீதியானது. பன்னாட்டு நிறுவனங்களின் இணைய வியாபார நோக்கத்துக்காக மாணவர்களைப் பலிகடா ஆக்கக்கூடாது. இணையவழித் தேர்வு எனும் அறிவிப்பின் மூலம் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது.

கரோனாவைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டு மாணவர்களின் மீது சுமையைச் செலுத்துவது அநீதியானது. யுஜிசி உத்தரவுக்கு எதிராகவும், சிபிஎஸ்சி பாடப்பிரிவில் ஜனநாயகம், பன்முகத்தன்மை, கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை, அரசியல் அறிவியல் உள்ளிட்ட பல பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதைக் கண்டித்தும் போராட்டம் நடத்தினோம்." என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x