

பிளஸ் 2 தேர்வு முடிவில் கரூர் மாவட்டம் 94.51 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 12-வது இடம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் இன்று (ஜூலை 16) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என 52 பள்ளிகள் உள்பட மெட்ரிக், தனியார் என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,729 மாணவர்கள், 5,390 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 119 பேர் எழுதினர்.
இதில் 4,363 மாணவர்கள், 5,200 மாணவிகள் என மொத்தம் 9,563 தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.51 சதவீதமாகும். தேர்ச்சி சதவீதத்தில் கரூர் மாவட்டம் தமிழக அளவில் 12-ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 94.07 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 10-வது இடத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளிகள் 90.48 சதவீத தேர்ச்சி
மாவட்டத்தில் உள்ள 52 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 4,498 மாணவ, மாணவிகள் தேர்வெழுதியதில் 4,070 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 90.48 சதவீதமாகும்.
100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்
பெரியகுளத்துப்பாளையம், வாங்கல், நெரூர், பொரணி, மணவாடி ஆகிய 5 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பசுபதிபாளையம் சாரதா பெண்கள் பள்ளி, நடையனூர் ரங்கசாமி கவுண்டர் பள்ளி, பி.உடையாபட்டி மாரிஸ்ட் ஆகிய 3 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
மாற்றுத்திறனாளிகள்
பார்வையற்றவர்கள் 3 பேர், காது கேளாத, வாய் பேசாத 5 பேர், மாற்றுத்திறனாளிகள் 11 பேர், இதரர் 8 பேர் என மொத்தம் 27 பேர் தேர்வெழுதியதில் பார்வையற்ற 3 பேர், காது கேளாத, வாய் பேசாத 4 பேர், மாற்றுத்திறனாளிகள் 10 பேர், இதரர் 8 பேர் என மொத்தம் 25 பேர் தேர்ச்சி பெற்றனர். காது கேளாத, வாய் பேசாதவர்கள் 80 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் 90.91 சதவீத தேர்ச்சியும், மற்றவர்கள் 100 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.