

பிளஸ் 2 பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை 85 தேர்வு மையங்களில் 211 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10 ஆயிரத்து 418 மாணவர்களும் 12 ஆயிரத்து 980 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 398 மாணவ, மாணவியர்களும் எழுதினர்.
இந்நிலையில், இன்று (ஜூலை 16) காலை ஆன்லைன் மூலம் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், மாணவர்கள் 95.98 சதவீதம், மாணவிகள் 98.04 சதவீதம் என மொத்தம் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
9 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஒரு மாநகராட்சி பள்ளி, 4 அரசு உதவி பெறும் பள்ளிகள், 8 சுயநிதிப் பள்ளிகள், 89 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 111 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.
அரசுப் பள்ளிகள்
திருப்பூர் கல்வி மாவட்டத்தில் திருப்பூர் பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளி, கானூர்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் கன்னிவாடி அரசு மேல்நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, புதுப்பை அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, உடுமலை கல்வி மாவட்டத்தில் உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தேவனூர்புதூர் என்.ஜி.பி. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியவாளவாடி நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளிகள் என 10 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மாநில அளவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில், ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர். தேர்ச்சி குறைவான பள்ளிகளைக் கண்டறிந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களின் கடின உழைப்பு காரணமாகவே மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடிக்க முடிந்தது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த வெற்றிக்கு உழைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், பல்வேறு பிரிவு ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாற்றுத்திறனாளி தேர்வர்களில் கண் பார்வையற்றோர் 100 சதவீதமும், வாய் பேச முடியாதோர் மற்றும் காது கேட்காதோர் 90 சதவீதமும், இதர வகை மாற்றுத்திறனாளிகள் 95.65 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த ஆண்டு 95.37 சதவீதம் பெற்று மாநில அளவில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக 97.12 சதவீதம் பெற்று மீண்டும் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.