

ஆசிரியர்கள் நியமனத்தில் நிர்வாக ரீதியாக காலதாமதம் ஏற்பட்டதே, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பதற்குக் காரணமாக இருக்கலாம் என புதுச்சேரி கல்வியமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கூறியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்ட நிலையில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 6,792 மாணவர்கள், 7,779 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 571 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இதில் 6,012 மாணவர்கள், 7,294 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 306 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.62 சதவீதம் குறைவாகும். அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 81.97 சதவீதம்.
கடந்த ஆண்டை விட புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 3.65 சதவீதம் குறைவாகும். காரைக்கால் மாவட்டத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியிலும் 100 சதவீத தேர்ச்சி இல்லை. திருநள்ளாறு பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி 94 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, வரும் ஆண்டுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனச் சொல்லப்பட்டது. அதற்கான முயற்சிகளை கல்வித்துறை, ஆசிரியர்கள் மேற்கொண்டனர். எனினும், நிர்வாக ரீதியாக ஆசிரியர்களை பணியமர்த்துதல், பணியிடங்களை உரிய நேரத்தில் நிரப்புதல் போன்றவற்றில் தாமதம் ஏற்பட்டதால் சிறிது குறைபாடு இருந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்".
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
அப்போது, முதன்மைக் கல்வி அதிகாரி ஏ.அல்லி, மேல்நிலைக் கல்வி துணை இயக்குநர் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தேர்ச்சி விவரம்
காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 952 மாணவர்கள், 1,325 மாணவிகள் என மொத்தம் 2,277 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இதில், 756 மாணவர்கள், 1,207 மாணவிகள் என மொத்தம் 1,963 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86.21 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.95 சதவீதம் குறைவாகும்.
காரைக்கால் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 81.23 சதவீதம். இது கடந்த ஆண்டை விட 2.91 சதவீதம் குறைவாகும். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 583 மாணவர்கள், 866 மாணவிகள் என மொத்தம் 1,449 பேர் தேர்வெழுதினர். இதில், 424 மாணவர்கள், 753 மாணவிகள் என மொத்தம் 1,177 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் 5 தனியார் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.