Last Updated : 16 Jul, 2020 06:28 PM

 

Published : 16 Jul 2020 06:28 PM
Last Updated : 16 Jul 2020 06:28 PM

தேர்வு நடத்துவது குறித்து யுஜிசிக்கு 640 பல்கலைக்கழகங்கள் பதில்

யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றி இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்திவிட்டதாகவும் அல்லது தேர்வுகளை நடத்தும் பணியில் உள்ளதாகவும் 640 பல்கலைக்கழகங்கள் பதில் அளித்துள்ளன.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஜூலை 6-ம் தேதி தெரிவிக்கப்பட்டது. இதற்கு டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

எனினும் நாடு முழுவதும் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றி இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

''நாடு முழுவதும் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றி இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்திவிட்டன அல்லது தேர்வுகளை நடத்தும் பணியில் உள்ளன. குறிப்பாக 640 பல்கலைக்கழகங்களில் (120 கருதப்படும் பல்கலைக்கழகங்கள், 229 தனியார் பல்கலைக்கழகங்கள், 40 மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் 251 மாநிலப் பல்கலைக்கழகங்கள்) இருந்து கருத்துக் கேட்கப்பட்டது.

இதில் 454 பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டதாகவோ நடத்த உள்ளதாகவோ தெரிவித்துள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் மாத இறுதிக்குள் செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி 182 பல்கலைக்கழகங்கள் தேர்வை நடத்தி முடித்துவிட்டன. 234 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடத்த உள்ளன. 38 பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டு வருகின்றன. 177 பல்கலைக்கழகங்கள் மட்டும் இன்னும் தேர்வு குறித்து முடிவெடுக்கவில்லை.

ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது இரண்டும் சேர்ந்த முறையில் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். எனினும் திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டியது அவசியம்.’’

இவ்வாறு ரஜ்னிஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x