Last Updated : 16 Jul, 2020 02:15 PM

 

Published : 16 Jul 2020 02:15 PM
Last Updated : 16 Jul 2020 02:15 PM

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 3-வது இடம்: 96.39% மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு இன்று (ஜூலை 16) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டத்தில் 96.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2019-20 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் கோவை மாவட்டத்தில் 96.39 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாநில அளவில் கோவை மாவட்டம் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 95.01 சதவீதம் தேர்ச்சி பெற்று, 4-வது இடத்தைப் பெற்ற இம்மாவட்டம், இந்த ஆண்டு 1.38 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

தேர்வு முடிவுகள் அந்தந்தப் பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில் ஒட்டப்பட்டன. மாணவர்கள் குறுந்தகவல் மற்றும் இணையதளம் மூலம் தங்கள் மதிப்பெண்களை அறிந்து கொண்டனர். 259 பள்ளிகளைச் சேர்ந்த 14,536 மாணவர்களும், 18,338 மாணவிகளும் என மொத்தம் 32,874 பேர் பொதுத்தேர்வு எழுதினர். இதில் 13,806 (94.98 சதவீதம்) மாணவர்களும், 17,880 (97.50) மாணவிகளும் என 31,686 பேர் தேர்ச்சி பெற்றனர்.

பாடவாரியாகத் தேர்ச்சி
அறிவியல் பாடப்பிரிவில் 6,004 மாணவர்கள், 7,555 மாணவிகள் என 13,559 பேரும், வணிகவியல் பாடப்பிரிவில் 6,742 மாணவர்கள், 9,403 மாணவிகள் என 9,403 பேரும், கலைப் பாடப்பிரிவில் 253 மாணவர்கள், 296 மாணவிகள் என 549 பேரும், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 807 மாணவர்கள், 626 மாணவிகள் என 1,433 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

மொழிப்பாடத்தில் 99.25 சதவீதம், ஆங்கிலப் பாடத்தில் 98.55 சதவீதம், இயற்பியல் பாடத்தில் 97.65 சதவீதம், வேதியியல் பாடத்தில் 97.95 சதவீதம், உயிரியல் பாடத்தில் 98.06 சதவீதம், தாவரவியல் பாடத்தில் 95.17 சதவீதம், விலங்கியல் பாடத்தில் 98.35 சதவீதம், புள்ளியியல் பாடத்தில் 98.90 சதவீதம், கணினி அறிவியல் பாடத்தில் 99.88 சதவீதம், புவியியல் பாடத்தில் 99.67 சதவீதம், உயிரி வேதியியல் பாடத்தில் 100 சதவீதம், நர்சிங் பாடத்தில் 100 சதவீதம், சத்துணவியல் பாடத்தில் 95.60 சதவீதம், தொடர்பு ஆங்கிலப் பாடத்தில் 100 சதவீதம், கணிதப் பாடத்தில் 97.59 சதவீதம், மனையியல் பாடத்தில் 100 சதவீதம், வரலாறு பாடத்தில் 94.99 சதவீதம், பொருளியல் பாடத்தில் 99.07 சதவீதம், அரசியல் அறிவியல் பாடத்தில் 98.70 சதவீதம், வணிகவியல் பாடத்தில் 98.14 சதவீதம், கணக்குப்பதிவியல் பாடத்தில் 97.52 சதவீதம், சிறப்புத் தமிழ் பாடத்தில் 97.73 சதவீதம், வணிகக் கணிதப் பாடத்தில் 99.39 சதவீதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் 99.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பள்ளிகள் வாரியாகத் தேர்ச்சி
அரசுப் பள்ளி மாணவர்கள் 90.57 சதவீதம் பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 97.33 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளி மாணவர்கள் 93.94 சதவீதம் பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் 98.47 சதவீதம் பேரும், மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 90.54 சதவீதம் பேரும், நகராட்சிப் பள்ளி மாணவர்கள் 89.96 சதவீதம் பேரும், சுயநிதிப் பள்ளிகளில் 99.31 சதவீதம் பேரும், சமூக நலப்பள்ளி மாணவர்கள் 83.33 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா வாழ்த்து தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x