Published : 15 Jul 2020 01:32 PM
Last Updated : 15 Jul 2020 01:32 PM

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 91.46% பேர் தேர்ச்சி

சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் 91.46% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்று வந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், கரோனா தொற்று காரணமாக முழுமையாக நடைபெறவில்லை. அவை ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தொற்றுப் பரவலால் அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் 91.46 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

18,85,885 மாணவர்கள் தேர்வெழுதப் பதிவு செய்திருந்த நிலையில், 18,73,015 தேர்வில் கலந்துகொண்டனர். இதில் 17,13,121 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளைப் பொறுத்தவரை தேர்ச்சி விகிதம் 93.31 ஆகவும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90.14 ஆகவும் உள்ளது. மாற்றுப் பாலின மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 78.95 ஆக உள்ளது.

இந்த ஆண்டு மெரிட் பட்டியலோ, மதிப்பெண்களோ வெளியிடப்படவில்லை. கிரேடு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளைக் காணலாம்.

மாணவர்களின் மதிப்பெண் கணக்கீடு எப்படி?

ஏற்கெனவே நடந்த பொதுத் தேர்வுகளில் 3 தேர்வுகளை மட்டுமே எழுதிய மாணவர்களுக்கு, அதில் இருந்து சிறந்த 2 மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அனைத்துப் பாடங்களுக்கும் அந்த சராசரி மதிப்பெண்ணே வழங்கப்படும். மூன்று தேர்வுகளுக்கும் குறைவாக, அதாவது ஒன்று அல்லது இரண்டு தேர்வுகளை மட்டுமே எழுதியவர்களுக்கு அக மதிப்பீடு மற்றும் செயல்முறைத் தேர்வுகளின் செயல்பாடுகளைக் கொண்டு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.

கடந்த ஆண்டு வெளியான 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் 13 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு 499 பெற்று, முதலிடத்தைப் பிடித்திருந்தனர். அப்போது மொத்தத் தேர்ச்சி விகிதம் 91.10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x