Published : 11 Jul 2020 07:45 PM
Last Updated : 11 Jul 2020 07:45 PM

கரோனா பெருந்தொற்று: 62% வீடுகளில் குழந்தைகளின் கல்விக்குத் தடை: ஆய்வில் தகவல்

கரோனா பெருந்தொற்று காலத்தில் 62% வீடுகளில் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டுள்ளதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

குழந்தைகள் நலத் தொண்டு நிறுவனமான ‘சேவ் த சில்ரன்’ அமைப்பு கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள், கரோனா வைரஸின் விளைவுகள் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தியது. நாடு முழுவதும் நான்கு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டு ஜூன் 7 முதல் 30-ம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டது.

15 இந்திய மாநிலங்களில் 7,235 குடும்பங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. வடக்குப் பிராந்தியத்தில் 3,827 வீடுகளிலும் தெற்கு பிராந்தியத்தில் 556 வீடுகளிலும் ஆய்வு நடைபெற்றது. கிழக்குப் பிராந்தியத்தில் 1,722 வீடுகளிலும் மேற்கில் 1,130 வீடுகளிலும் கேள்வி கேட்கப்பட்டது.

இந்த ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

’’கணக்கெடுப்பில் கலந்துகொண்ட ஐந்தில் மூன்று வீடுகளில், அதாவது 62 சதவீத வீடுகளில் கல்வி தடைப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக வட இந்தியாவில் 64 சதவீதமாகவும் குறைந்தபட்சமாக தென்னிந்தியாவில் 48 சதவீதமாகவும் உள்ளது.

மதிய உணவைப் பொறுத்தவரை ஐந்தில் இரண்டு வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பதில்லை. நகரப் பகுதிகளில் 40 சதவீதக் குழந்தைகளுக்கும் கிராமப் பகுதிகளில் 38 சதவீதக் குழந்தைகளுக்கும் மதிய உணவு கிடைப்பதில்லை.

இதில் 40 சதவீத வீடுகளால் குழந்தைகளுக்குப் போதிய உணவை அளிக்க முடிவதில்லை. 10-ல் 8 வீடுகளில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளுக்குப் போதிய ஊட்டச்சத்தும் கிடைப்பதில்லை. அவர்களுக்கு உணவில்லாத நிலையில் கல்வியும் தடைப்பட்டுள்ளது. ஐந்தில் இரண்டு வீடுகளுக்கு பள்ளிகளிடமிருந்தோ கல்வித் துறையில் இருந்தோ, குழந்தைகளின் கல்விக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

குறிப்பாக கிராமப் பகுதிகளில் 42 சதவீதமும் நகரப் பகுதிகளில் 40 சதவீத அளவிலும் கல்வி உதவி கிடைக்கவில்லை. அதேபோல 14 சதவீத வீடுகளில் ஸ்மார்ட் போன் வசதி இல்லை. பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் நான்கில் ஒரு குழந்தை வீடுகளில் வேலை செய்கிறது.

ஐந்தில் ஒரு வீட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது’’.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x