Last Updated : 09 Jul, 2020 12:32 PM

 

Published : 09 Jul 2020 12:32 PM
Last Updated : 09 Jul 2020 12:32 PM

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு முன்பே மாணவர் சேர்க்கை!- தனியார் கல்லூரிகள் மீது குவியும் புகார்கள்

இன்னும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளே வெளியாகாத நிலையில், பல தனியார் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றன. முழுக்க முழுக்கப் பண அறுவடைதான் இதன் முக்கிய நோக்கம் என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 785 கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 105 அரசுக் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், மற்றவை அனைத்தும் சுயநிதிக் கல்லூரிகள். பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் போன்றவற்றையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டும்.

பள்ளிகளிலேயே, ‘மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது, கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது.

இதுகுறித்து மதுரை கல்லூரி முன்னாள் முதல்வரும், பியுசிஎல் அமைப்பைச் சேர்ந்தவருமான பேராசிரியர் இரா.முரளி நம்மிடம் பேசுகையில், "தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஆன்லைன் வாயிலாகத் தொடங்கிவிட்டன என்று எங்களுக்கும் புகார்கள் வந்திருக்கின்றன. மதுரையைப் பொறுத்தவரையில் அமெரிக்கன் கல்லூரி, லேடிடோக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் கொடுத்து வருகிறார்கள். மதுரை என்றில்லை. தமிழ்நாடு முழுக்க இதுதான் நடக்கிறது.

பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில்தான் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பது அரசு விதி. தேர்வு முடிவு வரும் முன்பே விண்ணப்பம் கொடுத்து, கட்டணம் வசூலிப்பது பேருந்தில் ஜன்னல் வழியாகப் புகுந்து இடம்பிடிப்பது போல.

இதில் மெரிட் முறையோ, இட ஒதுக்கீடோ பின்பற்றப்பட வாய்ப்பு இல்லை. நாட்டில் மக்கள் பசியாலும், நோயாலும் செத்துக்கொண்டிருக்கும்போதும், பணத்தின் மீதே கல்லூரிகள் குறியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.

மதுரை காமராசர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பின் (மூட்டா) முன்னாள் தலைவர் பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் கூறுகையில், "தமிழ்நாட்டில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் அனைத்தும் இலவசம் என்று அரசு அறிவித்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அப்படியே பல்கலைக்கழகக் கட்டணம், நூலகக் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலித்தாலும்கூட, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.காம். படிப்புக்கு 1,000 ரூபாயும், பி.எஸ்சி. பாடப்பிரிவுகளுக்கு 2,500 ரூபாயும்தான் வரும். அதிகபட்சம் 3,000 ரூபாய் வரலாம். ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் 25 ஆயிரம், 30 ஆயிரம் என்று கட்டணம் வசூலிக்கின்றன.

மதுரையிலுள்ள சில தனியார் கல்லூரிகள் இந்தக் கட்டணத்தை மறைமுகமாக வசூலிக்கின்றன. ஆனால், சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, மதுரை லேடிடோக் கல்லூரி போன்றவை தங்களது இணையதளத்திலேயே கட்டணம் 25 ஆயிரம், 30 ஆயிரம் என்று போட்டிருக்கிறார்கள். காரணம், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கான விதிமுறைகளில் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு சில விதிமுறை தளர்வுகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தித்தான் இதைச் செய்கிறார்கள்.

இதுவே இப்படி என்றால், சுயநிதிக் கல்லூரிகளின் நிலையைச் சொல்லவும் வேண்டுமா? அங்கே எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் பணத்தை வாரிக் குவிக்கிறர்கள். தமிழ்நாட்டில் இப்போதுதான் கிராமப்புற, ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகள் அதிக அளவில் உயர் கல்வியில் சேரத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தக் கரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடந்தால் அவர்களால் நிச்சயம் சேர முடியாது. இது மோசமான பாகுபாடு மட்டுமல்ல, அப்பட்டமான முறைகேடு" என்றார்.

பேராசிரியர்கள் அனந்தகிருஷ்ணன், முரளி

இதுபற்றி மதுரையின் பிரபலமான தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வரிடம் கேட்டபோது, "எங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரம் செய்தது உண்மைதான். ஆனால், நாங்கள் முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்குத்தான் மாணவர்களைச் சேர்க்கிறோம். ஃபைனல் செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் வரும் முன்பே, 5-வது செமஸ்டர் வரையிலான மதிப்பெண்களைக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று விதியிருக்கிறது. அரசுக் கல்லூரிகளில்கூட முதுநிலைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவிட்டார்கள்.

இளநிலைப் பட்டப்படிப்பைப் பொறுத்தவரையில் விண்ணப்பம் மட்டும்தான் வழங்குகிறோம். எல்லாக் கல்லூரிகளிலும் இதுதான் நடக்கிறது. இளநிலைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை எதுவும் நடைபெறவில்லை. எனவே இது தவறான குற்றச்சாட்டு" என்றார்.

இந்தப் புகார்களுக்கு விளக்கமறிய மதுரை மண்டலக் கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, "இதுபற்றி எங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை" என்று முடித்துக் கொண்டார்கள்.

புகார் வரவில்லை என்பதற்காக நமக்குத் தெரிந்தே நடக்கும் முறைகேடுகளைக் கண்டும் காணாமல் இருப்பதும் முறைகேடுகளுக்குத் துணைபோவது மாதிரிதான். இதைப் புரிந்துகொண்டு இந்த விவகாரத்தில் இனியாவது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கட்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x