Published : 07 Jul 2020 01:33 PM
Last Updated : 07 Jul 2020 01:33 PM

நாடு முழுவதும் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்க: ட்ரெண்டாகும் மாணவர்கள் கோரிக்கை

கரோனா தொற்று சூழலில் நாடு முழுவதும் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று இணையத்தில் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஹேஷ்டேகுகளும் ட்ரெண்டாகி வருகின்றன.

கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. நோய்த்தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மத்திய, மாநிலப் பள்ளிக் கல்வி வாரியங்களின் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

முன்னதாக, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் தேர்வுகள் இல்லாமலேயே தங்களின் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடிவெடுத்தன. எனினும் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கிடையே தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்கள் முடிவு எடுக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்கப்படுவதாகவும் தேர்வுகள் மற்றும் கல்வி நாட்காட்டி குறித்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பாதிப்பைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் இளங்கலை மற்றும் முதுகலைக் கல்லூரி மாணவர்கள், தங்கள் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருப்பதையும் மாணவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இது தொடர்பாக இணையத்தில் #PromoteFinalYearStudents, #Cancel_Exam2020, #StudentsLivesMatter உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x