Published : 06 Jul 2020 04:46 PM
Last Updated : 06 Jul 2020 04:46 PM

கட்டுப்பாடுகளை உடைத்துக் கல்வியில் சாதித்த ஸ்ரீதேவி; முதுவர் பழங்குடியின மாணவியின் ஆச்சரியக் கதை!

தாய், தந்தையருடன் ஸ்ரீதேவி

வால்பாறை

‘கருமுட்டி - பூச்சிக் கொட்டாம்பாறையைச் சேர்ந்த முதுவர் பழங்குடியின மாணவியான ஸ்ரீதேவி, பழங்குடியின உண்டு - உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்து 10-ம் வகுப்பில் திருச்சூர் மாவட்டத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். கேரள அரசின் பழங்குடி மாணவிக்கான சிறப்புப் பரிசையும் பெற்றுள்ளார். இவரது கல்விச் செலவைக் கேரள அரசே ஏற்றுக்கொண்டுள்ளது’ - சமீபத்தில் சமூக வலைதளங்களில் வந்த இச்செய்தியைப் படித்தவர்களில் எத்தனை பேருக்கு இதில் உள்ள ஆச்சரியக் கதை தெரியும் என்று தெரியவில்லை.

கருமுட்டி கிராமத்தையும், அதில் வசிக்கும் முதுவர் பழங்குடிகளையும், அங்கே பெண்களுக்கு எதிராக நிலவும் கடும் கட்டுப்பாடுகளையும் தெரிந்துகொண்டால், அவற்றையெல்லாம் மீறி இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கும் ஸ்ரீதேவியின் தனிச்சிறப்பை உணர்ந்துகொள்ள முடியும்.

வால்பாறை அருகே உள்ள கிராமம் கருமுட்டி. வனவிலங்குகள் நடமாடும் காட்டுப் பாதையில் 2 கிலோ மீட்டர் நடந்துதான் இந்தக் கிராமத்துக்குச் செல்ல வேண்டும். 50-60 குடும்பங்களே இங்கு வசிக்கின்றன.

இங்கு வசிக்கும் முதுவர் பழங்குடிகளிடம் காலங்காலமாய் ஒரு விநோத வழக்கம் உண்டு. 4-5 வயதான ஆண் - பெண் குழந்தைகள் தனித்தனித் கொட்டகைகளில் தங்க வைக்கப்படுவார்கள். வயது வந்ததும் உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து வைக்கப்படுவார்கள். ஆடு, மாடு மேய்த்தல், விவசாயம் ஆகியவைதான் தொழில் என்றிருக்கும் பெண்கள் தப்பித்தவறிக்கூட அந்நிய ஆடவரைப் பார்க்கவோ, பேசவோ கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்டு தனிக்குடிலில் அடைக்கப்படுவார்கள். அவர்களுக்கான உணவு, உடை எல்லாம் ஊர்த் தலைவர் மூலம் வழங்கப்படும். ஆறு நாட்கள் இப்படி தனிமைச் சிறையில் இருக்கும் பெண்கள் கட்டுப்பாடுடன் மாற்று ஆண்களைப் பார்க்காமல் இருந்தால் திரும்ப ஊருக்குள் ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.

இந்தக் காலகட்டத்தில் அந்தப் பெண் மாற்று ஆடவரைப் பார்த்துவிட்டால் அவர்களுக்கு மீண்டும் ஆறு வார காலம் ஊர்விலக்க தண்டனை அளிக்கப்படும். அந்த ஆறு வார காலத்திலும் கட்டுப்பாட்டை மீறினால் ஆறு மாத காலம் ஊர் விலக்கம். அந்தக் கட்டுப்பாடும் மீறப்பட்டால் அந்தப் பெண்ணை ஊரை விட்டே நிரந்தரமாக அனுப்பிவிடுவார்கள்.

மலை மக்களிலேயே தாம் உயர்ந்த குடிகள் என்ற எண்ணம் கொண்டவர்கள் முதுவர்கள். ‘இருக்கிற மலைகளிலேயே உச்சாணி மலைதான் எங்கள் மலை. தாம் அருந்திய மீதித் தண்ணீரைக் குடிப்பவர்கள் கீழ்நாட்டவர்கள். எனவே, கீழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் எங்களுக்குக் கீழானவர்கள்’ என்ற எண்ணப் போக்கும், அதற்கேற்ப கட்டுப்பாடுகளும் கொண்டவர்கள்.

அப்படிப்பட்ட கிராமத்தில், முதுவர் குடியில் பிறந்தவர்தான் ஸ்ரீதேவி. இங்கிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேரள மாநிலம் சாலக்குடி சென்று அங்குள்ள மாடர்ன் ரெசிடன்ஷியல் ஸ்கூல் எனப்படும் பழங்குடியின மாணவிகளுக்கான உண்டு - உறைவிடப் பள்ளியில் தங்கிப் படித்து 10-ம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருப்பது சாதாரண விஷயமில்லைதானே?

எப்படிஇது சாத்தியமாயிற்று?

ஸ்ரீதேவியின் அப்பா செல்லமுத்துவிடம் பேசினேன். “இன்னும் எங்க ஊர்ல அந்தக் கட்டுப்பாடு இருக்கு. இப்பக்கூட வெளி ஆட்களோட எங்க ஊர்ப் பொண்ணு போனா விலக்கி வெச்சுடுவாங்க. இங்கே பொண்ணுகளைப் படிக்க வைக்கிறது நான் மட்டும்தான்” என்று ஆரம்பித்தவர் ஸ்ரீதேவியின் வெற்றிக் கதையைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘எனக்கு 45 வயசாகுது. அது சரியான வயசான்னு எனக்கே தெரியாது. எங்கூர்ல எல்லாம் அப்படித்தான். யாருக்கும், யாரோட வயசும் தெரியாது. அப்படிப்பட்ட இனத்துல நான் கொஞ்சம் விதிவிலக்கு. ஊர், ஊராப் போவேன். கேரளா, தமிழ்நாடுன்னு சுத்துவேன். எங்கே சுத்தினாலும் மது அருந்த மாட்டேன். தப்புப் பண்ண மாட்டேன். அதனால, ஊர்ல என்னை யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. நான் ரெண்டாவது படிச்சேன். எம் புள்ளைக மத்தவங்க போல இருக்கக் கூடாதுன்னு பெரிய பொண்ணு சிவகாமியை வால்பாறை பள்ளிக்கூடத்துல சேர்த்தேன். அங்கே அவளால சரியாப் படிக்க முடியலை. அந்த நேரம் கேரளாவுல இருக்கற எங்க மாமா ஒருத்தரின் பிள்ளை இறந்துடுச்சு. மனசுடைஞ்சுபோன அவர் தன் பேத்திய சாலக்குடியில படிக்க வைக்க முடிவு செஞ்சாரு. அதோட என் ரெண்டாவது பொண்ணையும் அதுல சேர்த்துவிட்டார்.

சாலக்குடி பள்ளிக்கூடம் சிறப்பானது. அந்த ஹாஸ்டல்ல 270 மாணவிகள் தங்கிப் படிக்கிறாங்க. சின்னப் பொண்ணோட பெரிய பொண்ணையும் அங்கேயே கொண்டுபோய் விட்டேன். பெரியவ பிளஸ் 2 முடிச்சுட்டு இப்ப வீட்ல இருக்கா. சின்னவ ஜில்லா ஃபர்ஸ்ட் வந்திருக்கா. முதுவா பழங்குடியில இப்படி யாருமே சாதனை செய்யலை. நானே எங்கூர்லயிருந்து ஏழெட்டு புள்ளைகளைப் பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டிருக்கேன். என் தம்பி, தங்கச்சி பொண்ணுக மூணு பேர், மறையூர்ல 7, 8, 10- ன்னு படிக்கிறாங்க” என்று விவரித்தார் செல்லமுத்து.

கருமுட்டியிலிருந்து 5 கிலோ மீட்டர் அடுத்த மலைக் கிராமம் பூச்சிக்கொட்டாம்பாறை. அங்கே விவசாய வேலைக்காகச் சில வருடம் முன்பு சென்றிருக்கிறது செல்லமுத்துவின் குடும்பம். அங்கேயும் முதுவர் குடும்பங்கள்தான் வசிக்கின்றன. அங்கேயும் கருமுட்டியின் கட்டுப்பாடுகள் முழுமையாக உண்டு. எனவே, கருமுட்டியையும், பூச்சிக்கொட்டாம்பாறை கிராமத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார்.

சாதித்த ஸ்ரீதேவியிடம் பேசினேன்.

“தமிழ், மலையாளம் ரெண்டும் கலந்ததுதான் முதுவா பாஷை. அதனால மலையாளத்துல படிக்கிறேன். எனக்கு ‘ஏ ப்ளஸ்’ கிரேடு கிடைச்சிருக்கு. அப்படீன்னா 100 சதவீதம். மாடர்ன் ரெசிடென்சியல் ஸ்கூல்தான் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியிருக்கு” என்று பேசியவரிடம், கருமுட்டி முதுவர் குடும்பங்களில் பெண்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் பற்றிக் கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறேன். இங்கேயும் எல்லாம் பொம்பளைப் புள்ளைகதான்” என்றார் வெள்ளந்தியாக.

“சரி, எதிர்காலத்தில் என்ன படிக்க ஆசை?” என்று கேட்டேன்.

எதையும் யோசிக்காமல், “ஸ்போர்ட்ஸ் டீச்சர்!” என்றவர், தொடர்ந்தார். “எனக்கு ஆட்டியா, பாட்டியா (கிளியாந்தட்டு) விளையாட்டில் ரொம்ப ஆர்வம். அதுல நேஷனல் லெவல் போட்டிக்காக காஷ்மீருக்குப் போயிட்டு வந்திருக்கேன். நான் இப்படி விளையாட்டுலயும் ஜெயிக்கிறதுக்கு எங்க ஸ்போர்ட்ஸ் டீச்சர்தான் காரணம். அதனால நானும் அவங்க மாதிரி ஸ்போர்ட்ஸ் டீச்சர் ஆகி, எல்லாருக்கும் அதே மாதிரி கத்துக்கொடுப்பேன்” என்றார் ஸ்ரீதேவி.

கட்டுப்பாடுகளை உடைத்து, சாதனை செய்யும் மலைக் கிராமத்து ஸ்ரீதேவிகள் மேலும் மேலும் உருவாக வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x