Published : 06 Jul 2020 08:31 AM
Last Updated : 06 Jul 2020 08:31 AM

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு இலவச பயிற்சி: சிபிஎஸ்இ - ஃபேஸ்புக் இணைந்து இணையவழி வகுப்பு

புதுடெல்லி

மத்திய பள்ளிக்கல்வி வாரியமும் (சிபிஎஸ்இ) ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்து டிஜிட்டல் பாதுகாப்பு, இணையதள நலவாழ்வு மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (மேம்படுத்திய மெய்மை) பிரிவுகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளன.

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக இதற்கான பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரு பாடப்பிரிவுகளிலும் தலா 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி தரப்படும். இந்த வகுப்புகளுக்கான பதிவு இன்று தொடங்கி வரும் 20-ம் தேதி முடிவடைகிறது.

ஆக்மென்டட் ரியாலிட்டி பாடப்பிரிவு வகுப்புகள் ஆகஸ்ட் 10-ம்தேதி தொடங்கும். பாடத்தொகுப்புகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் காணலாம்.

டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் இணையதள நல்வாழ்வு வகுப்புகள் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்கும் என சிபிஎஸ்இ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளில் பள்ளிகள், கல்லூரிகள் மூலமாக மாணவர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்படுவர். பயிற்சி முடிப்பவர்களுக்கு மின்னணு சான்று வழங்கப்படும். இரண்டாவது கட்டமாகவும் ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பாடப்பிரிவுகளில் தலா 30 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

தற்போது இணையதளம், சமூக ஊடக பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை பயன்படுத்தும்போது மிரட்டல்கள், பொய்த்தகவல்கள் வருவது, அடிமையாவது போன்ற எதிர்மறை விளைவுகளும் ஏற்படுகின்றன. இவற்றை முறையாக எதிர்கொள்ள துணைபுரியும் வகையிலும் அதனுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்திக் கொள்ளும் வகையிலும், சிபிஎஸ்இ மற்றும் ஃபேஸ்புக் இணைந்து இந்த பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

டிஜிட்டல் பாதுகாப்பு, இணையதள நல்வாழ்வு பாடத்திட்டத்தில் பாதுபாப்பு, தனிநபர் சுதந்திரம், மனநலம் போன்றவை இடம்பெறும். சமூக ஊடகங்களை கையாளும்போது பின்பற்றவேண்டிய உடல்நலம் பேணல் தொடர்பான இன்ஸ்டாகிராமின் வழிகாட்டு நெறிகளும் இந்தப் பயிற்சியில் பயன்படுத்தப்படும்.

பொறுப்பான டிஜிட்டல் பயனாளர்களை உருவாக்குவதும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், பொய்த்தகவல்கள் வந்தால் அவற்றை கண்டறிந்து தெரிவிக்க வைப்பதும் இந்தப் பயிற்சியின் நோக்கங்களில் அடங்கும். சமூக ஆய்வு மையம் என்ற அமைப்பு மூலமாக இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x