Last Updated : 04 Jul, 2020 05:20 PM

 

Published : 04 Jul 2020 05:20 PM
Last Updated : 04 Jul 2020 05:20 PM

நாட்டிலேயே முதல் முறை: பாடத்திட்டத்தில் 25% குறைத்தது சிஐஎஸ்சிஇ பள்ளி வாரியம்

இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சிலுக்கு (சிஐஎஸ்சிஇ) உட்பட்ட பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே பள்ளிப் பாடத்திட்டத்தை முதன்முதலில் குறைத்திருக்கும் வாரியம் இதுவே.

ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வுகளை நடத்திவரும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகள் கவுன்சிலானது இந்தக் கல்வி ஆண்டில் 25 சதவீதப் பாடத்திட்டத்தைக் குறைத்துள்ளது. இதுகுறித்து அந்த வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஓர் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டவை:

''பள்ளிக் கல்வி உட்பட வாழ்க்கையின் அத்தனை அம்சங்கள் மீதும் பெருந்தொற்றான கரோனா தாக்கம் செலுத்தி இருக்கிறது. ஊரடங்கினால் கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இத்தகைய சூழலைச் சமாளித்து ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தல் முறையைத் தடையின்றிக் கொண்டு செல்ல சிஐஎஸ்சிஇ வாரியப் பள்ளிகள் முயன்று வருகின்றன.

ஆனாலும் கல்வியாண்டின் காலம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அது மட்டுமின்றி பாடம் கற்பிக்கும் அவகாசமும் குறைந்துள்ளது. இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு எங்களுடைய பாடத்திட்டத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துள்ளோம். அதேநேரத்தில் பாடங்களின் முக்கிய கருத்தாக்கங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருக்கின்றன. கல்வியாளர்களின் ஆலோசனைகளின்படியே ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி தேர்வுகளுக்கான முதன்மைப் பாடங்களின் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.

குறைக்கப்பட்ட பாடத்திட்டம் சிஐஎஸ்சிஇ வாரியத்தின் இணையதளத்தில் (www.cisce.org) பதிவேற்றப்பட்டுள்ளது. எங்கள் வாரியத்துக்கு உட்பட்ட பள்ளிகளும் பாட ஆசிரியர்களும் புதிய பாடத்திட்டத்தைப் பின்பற்றும்படி கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில பள்ளிக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ ஆகியவை மாநில மற்றும் மத்திய அரசுகளின் கல்வி வாரியங்கள். சிஐஎஸ்சிஇ என்பதோ தனியார் கல்வி வாரியமாகும். இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட இந்தப் பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் இந்தியாவில் 2000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. 1958 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கீகாரத்துடன் இந்த வாரியம் நாட்டில் நிறுவப்பட்டது.

தற்போது கரோனா கால நெருக்கடியில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்ற விவாதம் தலைதூக்கி இருக்கிறது. நடப்புக் கல்வியாண்டில் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பாடத்திட்டம் மற்றும் பாடவேளைகள் குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அண்மையில் அறிவித்தார்.

மாநில பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தையும் கட்டாயம் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் நாட்டிலேயே பள்ளிப் பாடத்திட்டத்தை முதன்முறையாக குறைத்து அதனை அதிகாரபூர்வமாக சிஐஎஸ்சிஇ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x