Last Updated : 02 Jul, 2020 01:01 PM

 

Published : 02 Jul 2020 01:01 PM
Last Updated : 02 Jul 2020 01:01 PM

தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாறும் புதுச்சேரி பொறியியல் கல்லூரி: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுச்சேரி பொறியியல் கல்லூரியைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஏற்கெனவே மத்தியப் பல்கலைக்கழகம் இருந்தாலும் தற்போது தொடங்கப்பட உள்ள தொழில்நுட்பப் பல்கலைக்கழகமே புதுச்சேரியின் முதல் மாநிலப் பல்கலைக்கழகமாகும். இது தொடர்பாக விரைவில் அரசிதழ் வெளியானவுடன் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் 280 ஏக்கரில் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி அமைந்துள்ளது. கடந்த 1984-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தக் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்துடன் உள்ளது.

ராஷ்ட்ரீய உச்சதர் சிக்ஷா அபியான் (ரூசா) திட்டத்தின் கீழ், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லுாரிகள் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்படுவதற்கு புதுச்சேரி பொறியியல் கல்லூரியை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தந்துள்ளார்.

இது தொடர்பாக உயர்கல்வி வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி மற்றும் தொழில்முறைக் கல்லூரிகளும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது புதுச்சேரியின் முதல் மாநிலப் பல்கலைக்கழகமாகத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் விளங்கும். அப்போது மத்திய பல்கலைக்கழகத்தைச் சாராமல் தனித்துச் செயல்பட முடியும். அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளன. இவை, இனி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைய முடியும்.

பல்கலைக்கழகப் பணிக்காக, ரூ.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக ரூ.28.75 கோடி தரப்பட்டு, புதுச்சேரி பொறியியல் கல்லுாரி வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளை புதுச்சேரி அரசு அரசிதழில் விரைவில் வெளியிடும். அரசிதழில் வெளியானவுடன் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்பாட்டுக்கு வரும்.

இதன் மூலம் புதிய பொறியியல் படிப்புகளை உடனுக்குடன் ஆரம்பிக்க முடியும். பாடத் திட்டங்களையும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமே தயாரித்துக் கொள்ளலாம். பொறியியல் படிப்பு இடங்களின் எண்ணிக்கை, மாணவர் சேர்க்கை போன்றவற்றையும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமே முடிவு செய்யும்.

காரைக்காலில் அமைந்துள்ள காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் காரைக்கால் மையமாக மாற்றப்படும்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x