Published : 01 Jul 2020 03:53 PM
Last Updated : 01 Jul 2020 03:53 PM

சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள ஆன்லைன் பிஎஸ்சி பட்டப்படிப்பு தொடக்கம்

புதுடெல்லி

உலகின் முதல் இணைய வழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியல் இளநிலைப் பட்டப்படிப்பை (Online B.Sc. Degree in Programming and Data Science) மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இதனை தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பால் (NIRF), இந்தியா தரவரிசை 2020 இல் முதலிடத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை (IIT மெட்ராஸ்) தயாரித்து வழங்கியுள்ளது. இந்தப் பட்டப்படிப்பில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், ஆங்கிலம் மற்றும் கணிதத்துடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் மேலும் கல்லூரிகளில் வேறு இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

2026 ஆம் ஆண்டில் 11.5 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று தரவு அறிவியல் துறையாகும். இணையவழிக் கல்வி என்பது ஒரு பெரிய அளவில் தரமான உயர்தரக் கல்வியை விரைவாகப் பெற பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வழியாக உள்ளது.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இணையவழிக் கல்வி செயல்முறைகளைப் பயன்படுத்தி நடத்துகிறார்கள். அத்துடன் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய குறைந்த கட்டணக் கல்வி மாதிரியை முன்வைக்கிறது. இது ஐ.ஐ.டியில். வேறு ஒரு பரிணாமத்தில் கற்பித்தலை விரிவாக்கும்.

நிகழ்வில் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றும்போது பொக்ரியால் உலகின் முதல் இணையவழி (B.Sc) நிரலாக்கல், தரவு அறிவியலுக்கான இளநிலைப் பட்டப்படிப்பைத் தொடங்கிய சென்னை ஐ.ஐ.டி அறிஞர்கள் குழுவினரை வாழ்த்தினார். 2020 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் தற்போதைய தேர்ச்சியடைந்த மாணவர்கள், இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் இந்தப் பட்டப்படிப்பில் இணையலாம் எனத் தெரிவித்தார். மேலும் இந்தத் தனித்துவமான படிப்பிற்கு வயது தடையில்லை என்றும், வரையறைகள், இடம் ஆகியவை ஒரு பொருட்டில்லை என்பதுடன் அதற்கான அனைத்துத் தடைகளையும் நீக்குகிறது என்றார். திறமையான நிபுணர்களுக்குப் பெரும் தேவை உள்ள தரவு அறிவியலில் உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை எளிமையாக அணுக வழி வகுக்கிறது என்றும் பொக்ரியால் கூறினார்.

தற்போது இந்தியாவில் கல்லூரிகளில் வேறு பிரிவுகளில் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், படிப்புகளை மாற்றத் தேவையில்லாமல் இந்தப் பட்டப்படிப்பைத் தொடரலாம் என்று பொக்ரியால் கூறினார். தங்கள் ஊழியர்களின் கல்வித் தகுதியை உயர்த்த விரும்பும் தொழிலதிபர்கள் கூட பணியில் உற்பத்தி நேரத்தை இழக்காமல், இந்தப் பட்டப்படிப்பில் இணைவதைக் கருத்தில் கொள்ளலாம்.

இந்தத் திட்டம் லாபகரமான ஒரு துறையில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பிரகாசமாக்குகிறது, பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு தொழில் மாறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது, மேலும் ஐ.ஐ.டி மெட்ராஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பையும் கற்பவர்களுக்கு வழங்குகிறது.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஐ.ஐ.டி மெட்ராஸ் அறிஞர்கள் குழுவினரை வாழ்த்திய தோத்ரே, இன்றைய உலகக் கல்வி ஒரு தொடர்ச்சியான செயல் என்று கூறினார். மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கடும் போட்டிகளை சமாளிப்பதற்குக், கிடைக்கும் நேரம் மற்றும் தங்கள் பணியாற்றும் இடம் ஆகிய பல கட்டுபாடுகளுக்குகிடையில் தங்கள் அறிவைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்,

இந்த தனித்துவமான இணையவழிப் பட்டப்படிப்பு மூன்று வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படும் – அடிப்படைப் பட்டம் (Foundation programme), டிப்ளமோ பட்டம் (Diploma programme), இளநிலைப் பட்டப்படிப்பு (Degree Programme). இந்தப் பட்டப்படிப்பின் மூன்று நிலைகளில் எந்தவொரு கட்டத்திலும் வெளியேறும் சுதந்திரம் உண்டு என்பதுடன், அவ்வாறு வெளியேறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸிலிருந்து முறையே அடிப்படைச் சான்றிதழ், டிப்ளமோ சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்புச் சான்றிதழ் கிடைக்கும். தகுதியின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுதித் தேர்வுக்கு ரூ.3000 கட்டணம் செலுத்த வேண்டும்.

மாணவர்களுக்கு 4 பாடங்களில் (கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை) 4 வாரப் பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பிவைக்கப்படும். இந்த மாணவர்கள் இணையத்தில் பாட விரிவுரைகளைக் கற்பதுடன், இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளைச் சமர்ப்பிப்பார்கள்.

மேலும் 4 வாரங்களின் முடிவில் தகுதித் தேர்வை எழுதுவார்கள். குறைந்த எண்ணிக்கையிலான வளாக இடங்கள் காரணமாக தடை செய்யப்பட்ட ஐ.ஐ.டி.களின் வழக்கமான சேர்க்கை செயல்முறைகளுக்கு மாறாக, இந்தத் திட்டத்தில் அனைத்து மாணவர்களும் (ஒட்டுமொத்த மதிப்பெண் 50 சதவீதத் தேர்ச்சியுடன் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களும்) அடிப்படைப் பட்டத்திற்குப் (foundation programme) பதிவு செய்யத் தகுதியுடையவர்கள்.

இந்த பட்டப்படிப்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, உள்நுழைக https://www.onlinedegree.iitm.ac.in/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x