Published : 29 Jun 2020 03:30 PM
Last Updated : 29 Jun 2020 03:30 PM

கரோனா சிக்கலில் தனியார் கல்வி நிறுவனங்கள்; கஷ்ட ஜீவனத்தில் ஆசிரியர்கள்!

கரோனாவுக்குப் பயந்து மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கப்படாத நிலையில், மாணவ - மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடக்கின்றன. கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என அரசு கூறியுள்ள நிலையில், பல கல்வி நிறுவனங்கள் தங்களது ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன.

தனியார் பள்ளிக்கூடங்கள் தங்களது மாணவ - மாணவிகள் செலுத்தும் கல்விக் கட்டணத்தையே மூலதனமாகக் கொண்டு இயங்குகின்றன. கரோனாவால் பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்குக் கல்விக் கட்டணம் கட்டமுடியாமல் திணறுகின்றனர். இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாகவே சம்பளம் வழங்கவில்லை. தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கமாகவே பள்ளியின் கோடை விடுமுறைக் காலமான மே மாதத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.

அதனால் ஏப்ரலில் வழங்கப்படும் சம்பளத்தில் மிச்சம் பிடித்து ஆசிரியர்கள் தங்கள் வாழ்வை ஓட்டிவந்தனர். கரோனாவால் மார்ச்சிலேயே பள்ளிகள் மூடப்பட்டு விட்டதால் ஏப்ரல் மாத சம்பளத்தையே சில ஆசிரியர்கள் இழந்தனர். தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் இல்லாததால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதேபோல் தனியார் கல்லூரியின் பேராசிரியர்களுக்கும் பல கல்லூரிகள் சம்பளம் வழங்கவில்லை. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரையே சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு அதிகபட்ச சம்பளமே 18 ஆயிரம்தான். இதனால் இவர்களது அன்றாட வாழ்வே கேள்விக்குறியாகியுள்ளது. அதேபோல் பல தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் ஆன்லைனில் வகுப்பு நடத்தினாலும், இணையக் கட்டணத்தைக் கட்டக்கூட வழியில்லாமல் திணறி வருகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி மற்றும் ஆங்கிலப் பள்ளிகள் கூட்டமைப்பின் நிர்வாகியான அமீர் உசேன் ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசுகையில், “கடந்த கல்வி ஆண்டில் திடீரென கல்விக் கூடங்கள் மூடியதால் 40 சதவீத கல்விக் கட்டணங்கள் வரவில்லை. இப்போது அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையும் முடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் 5 லட்சம் ஆசிரியர்களும், 2 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை இழக்கும் அபாயம் எழுந்துள்ளது. அதேநேரம் பள்ளிக்கூடங்களில் கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் இதுவரை அரசு எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தனியார் பள்ளிகள் அதிகமான வருமானம் ஈட்டுபவை என்ற தவறான புரிதல் பலருக்கும் இருக்கிறது. தமிழகத்தில் செயல்படும் சுமார் 15 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 2 முதல் 4 சதவீதப் பள்ளிகள் மட்டுமே கோடிகளை முதலீடு செய்து லட்சங்களில் கல்விக் கட்டணம் வாங்குபவை. ஆனால், அதைத் தாண்டி எத்தனை பள்ளிகள் இருக்கின்றன? நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளை எல்லாம் ஏற்கெனவே மிகவும் கஷ்டமான சூழலில்தான் நடத்துகிறார்கள். அங்கெல்லாம் பணிசெய்யும் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் கல்விக்கட்டணம் செலுத்தாவிட்டால் எப்படி சம்பளம் கொடுக்கமுடியும்?

கல்விக் கட்டணத்தைச் செலுத்தும்படி அரசு பெற்றோரை வலியுறுத்தவில்லை. அரசால் அதை வலியுறுத்த முடியாத பட்சத்தில் அரசுக்கு எங்களிடம் மாற்று யோசனை ஒன்று இருக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அரசு செலவு செய்கிறது. தனியார்பள்ளிகளோ அதே அளவு தொகையை அரசுக்கு வருடம்தோறும் மிச்சப்படுத்துகிறது. அரசு ஆசிரியர்கள் வேலை செய்யாத நாள்களில் மட்டும் 10 சதவீத சம்பளத்தைப் பிடித்தம் செய்து, அதை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக அரசே கொடுக்கலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x