Last Updated : 26 Jun, 2020 07:25 AM

Published : 26 Jun 2020 07:25 AM
Last Updated : 26 Jun 2020 07:25 AM

கரோனா ஊரடங்கால் குழந்தைகளின் கற்றல் பாதிப்பு; ‘சிட்டுக்கள் மையம்’ முன்வைக்கும் மாற்று கல்வி வழிமுறைகள்: தமிழக அரசு பரிசீலிக்குமாறு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

சென்னை

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுவதைத் தவிர்க்க மாற்று கல்வி முறைகளை தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகளின் எதிர்கால கல்வி குறித்த அச்சம் பெற்றோர் மத்தியில் நிலவுகிறது. இதையடுத்து மாற்று கற்பித்தல் முறைகளை பின்பற்ற அரசுக்கு கல்வியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் தங்கள் ‘சிட்டுக்கள் மைய’ கல்வி முறை சிறந்த மாற்றாக இருக்கும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு ஏற்கெனவே அரசுடன் இணைந்து நடத்திய அறிவொளி இயக்கம் மூலம் 1990-ம்ஆண்டுகளில் முதியவர்களுக்கு கல்வியறிவு அளிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக ஆரோக்கிய இயக்கம், ‘சிட்டுக்கள் மையம்’ என பல்வேறு அமைப்புகளைத் தொடங்கி கல்விசார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ‘துளிர் இல்லம்’ என்ற அமைப்புமூலம் தமிழகத்தில் 500 இடங்களில்குழந்தைகளுக்கு கற்றல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் தேனி சுந்தர் கூறியதாவது:

‘சிட்டுக்கள் மைய’த்தின் மூலம்பள்ளி செல்ல இயலாத குழந்தைகளை ஒருங்கிணைத்து கல்வி கற்பிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த மையத்தில் பாட்டு, கதை, விளையாட்டு ஆகிய வழிமுறைகளில் பாடங்கள் நடத்தப்படும். வேலைக்குச் செல்லும் குழந்தைகள் பங்கேற்க ஏதுவாக மாலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.

தினமும் 2 மணி நேர வகுப்பில் கலந்துரையாடல், விளையாட்டு, கதைகள், வீட்டுப்பாடங்களை சரிபார்த்தல் என பயிற்சி தரப்படும். கற்றல் குறைபாடுடைய குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பிரத்யேக பயிற்சி வழங்கப்படும்.கதை, பாடல் என குழந்தைகளுக்கு பிடித்த முறையில் கற்றுத் தரப்படுவதால் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ‘சிட்டுக்கள் மைய’த்தின் கற்பித்தல் வழிமுறைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மையத்தில் அதிகபட்சம் 10 பேருக்கு மட்டுமே அனுமதிஎன்பதால் கூட்டம் தவிர்த்து சிறுசிறு குழுவாக குழந்தைகளை ஒன்று திரட்டலாம். தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவதிலும் சிரமம் இருக்காது.

மேலும், வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து கிராமங்களில் தெருவுக்கு ஒருமையம், நகரங்களில் குடியிருப்புக்கு ஒரு மையம் என வகுப்புகளை திட்டமிட்டு நடத்தலாம். இதற்கு குழந்தைகளின் பெற்றோர் ஒத்துழைப்பும் எளிதாகக் கிடைக்கும்.

தற்போது சுகாதாரப் பேரிடர் காலம் என்பதால் முதல் சில வாரங்கள் பாடநூல்கள் தவிர்த்து கரோனாவிழிப்புணர்வு செய்திகள், அறிவியல் கதைகள், யுனிசெப் கையேடுகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். மேலும், காகிதகலைப் பயிற்சி, எளிய அறிவியல்பரிசோதனைகளை செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்தலாம்.

அதேபோல், மரங்கள், பறவைகள், மண்ணின் தன்மை, நீர்வளம் உட்பட வாழ்வுடன் தொடர்புடைய பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் கற்றுத் தர வேண்டும். அதன்பின் அடுத்தடுத்த வாரங்களில் பாடநூல்களை கற்பிக்கத் தொடங்கலாம். எனினும், தேர்வு போன்ற மதிப்பீடுகளை பின்பற்றக் கூடாது.

இந்தச் சூழலுக்கு இணையவழிக் கல்வி சிறந்த மாற்றாக இருக்காது. அனைவருக்கும் சமவாய்ப்பையும் வழங்காது. ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பதால் உடல்நலத்துடன் உளவியல்ரீதியாகவும் குழந்தைகள் பாதிக்கப்படுவர்.

எனவே, கரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை இத்தகைய மாற்று வழிமுறைகளை கல்வியாளர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசித்து செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் குழந்தைகளுக்கு தடையில்லா கல்வியறிவை தொடர்ந்து அளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x