Published : 25 Jun 2020 03:29 PM
Last Updated : 25 Jun 2020 03:29 PM

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து; ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள்

ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, உச்ச நீதிமன்றத்தில் வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு கட்டமாக நடைபெறுவதாக இருந்தன. தேர்வுகள் நடைபெற்று வந்த சூழலில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 29 பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தத் தேர்வுகள் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படுவதாக இருந்தன.

எனினும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று பெற்றோர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், சிபிஎஸ்இ உரிய பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து இன்று உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்த சிபிஎஸ்இ வாரியம், ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தங்களால் தேர்வு நடத்த முடியாது என்று கூறியதாக சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ கூறியுள்ளது.

எனினும் உகந்த சூழல் ஏற்படும்போது 12-ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் மாணவர்கள் விருப்பப்பட்டால் தேர்வுகளை எழுதலாம் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் வெளியாகும் எனவும் செப்டம்பரில் புதிய வகுப்புகள் தொடங்கப்படலாம் என்றும் சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x