Published : 21 Jun 2020 07:07 AM
Last Updated : 21 Jun 2020 07:07 AM

‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘ஏன், எதற்கு, எப்படி’ விழிப்புணர்வு நிகழ்ச்சி; சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைப்பது எப்படி?- கிரகணம் குறித்து வானியல் அறிஞர்கள் சுவாரஸ்ய விளக்கம்

சந்திரன் சிறியதாக இருந்தும், சூரியனை 98 சதவீதம் மறைப்பது எப்படி என்று ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘ஏன், எதற்கு, எப்படி’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வானியல் அறிஞர்கள் சுவாரஸ்யமாக விளக்கினர்.

கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ஆன்லைனில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்வதற்காக ‘ஏன், எதற்கு, எப்படி?’ என்ற ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதில் பங்கேற்ற வானியல் அறிஞர்கள் கூறியதாவது:

மும்பை நேரு கோளரங்கத்தின் கவுரவ விரிவுரையாளர் எஸ்.நடராஜன்: சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த நிகழ்வின்போது சூரியனின் கதிர்கள் பூமியில் விழாதவாறு சந்திரன் மறைக்கிறது. சூரியனை பாம்பு விழுங்குவதால் இவ்வாறு நடப்பதாக மக்கள் வெகுகாலம் கூறிவந்தனர். அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று, தொலைநோக்கிகள் வழியாக ஏராளமான வானியல் ஆய்வுகள் நடைபெற்ற பிறகு, சூரிய கிரகணம் எதனால் நிகழ்கிறது என்பதை வானியல் அறிஞர்கள் விளக்கினர்.

‘சூரிய கிரகணத்தின்போது சாப்பிடக் கூடாது. கர்ப்பிணிப் பெண்கள் அதை பார்க்கக் கூடாது. வீட்டைவிட்டு யாரும் வெளியே போகக் கூடாது’ என பல தவறான கருத்துகள் உள்ளன. இவை அறிவியல் பூர்வமாக உண்மையில்லாத தகவல்கள். இவற்றை நம்பக் கூடாது. அதேநேரம், சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தொலைநோக்கிகள் வழியாக பார்ப்பதே சரி.

தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள்: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை 21-ம் தேதி (இன்று) காண உள்ளோம். இதில், சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைப்பதுபோல இருக்கும். உண்மையில், சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும் சந்திரன்தான் அதை மறைக்கிறது. தவிர, அது அளவிலும் சிறியது. சந்திரன் நமக்கு அருகில் இருப்பதால், அது சூரியனை முழுவதுமாக மறைப்பதுபோல தெரிகிறது.

சந்திரன் நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இந்த தூர அளவு மாறிக்கொண்டே இருக்கும். எல்லாப் பொருட்களுக்கும் நிழல் இருப்பதுபோல, சூரியன், சந்திரனுக்கும்கூட பல லட்சம் கி.மீ. தூரம் உள்ள நிழல் உண்டு. நாளை நடைபெறும் சூரிய கிரகணமானது 98 சதவீத அளவு சூரியனை மறைப்பதுபோல அமைய உள்ளது.

இந்த கிரகணத்தை ராஜஸ்தான், ஹரியாணா, உத்தராகண்ட், பஞ்சாப் மாநிலங்களின் சில பகுதிகளில் முழுமையாக காண முடியும். தமிழகத்தில் பகுதி கிரகணத்தைத்தான் காண முடியும். சூரிய கிரகணத்தின்போது பூமி, கடல், அலைகள் பற்றி அறிவியல் பூர்வமான பல தகவல்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில்ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்களது கேள்விகள், சந்தேகங்களுக்கு அறிஞர்கள் விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x