

கரோனா தொற்றால் இறுதி செமஸ்டர் வரை அனைத்துத் தேர்வுகளையும் புதுச்சேரி பல்கலைக்கழகம் ரத்து செய்திருந்த சூழலில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குத் தேர்வுகள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கால் பொதுப் போக்குவரத்து இன்னும் சீராகாத நிலையில், புதுச்சேரியில் கல்லூரிகளுக்கான தேர்வை ஜூலையில் நடத்த புதுச்சேரி பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பையும் பல்கலைக்கழகம் வெளியிட்டதால் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக இறுதி செமஸ்டர் தேர்வு தவிர்த்து இதர செமஸ்டர்களுக்குத் தேர்வு இல்லை எனவும் உள் அகமதிப்பீடு மூலம் மதிப்பெண்கள் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதி செமஸ்டர் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
இச்சூழலில் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் லாசர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், ''இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய நர்சிங் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின்படி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள எம்பிபிஎஸ், பல் மருத்துவம், நர்சிங், பார்மஸி தேர்வுகள் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.
எம்.டி., எம்.எஸ். தேர்வுகள் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடக்கும். கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தேர்வுத் தேதிகள் அனைத்தும் பின்னர் அறிவிக்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.