Last Updated : 11 Jun, 2020 05:30 PM

 

Published : 11 Jun 2020 05:30 PM
Last Updated : 11 Jun 2020 05:30 PM

கரோனா விழிப்புணர்வுப் பணி: விரைவில் ஈடுபட உள்ள 10,000 சென்னை பள்ளி ஆசிரியர்கள்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி 10 ஆயிரம் சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாலும் பள்ளிக்கூடங்கள் இதுவரை திறக்கப்படாததாலும் சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை கரோனா காலத்தில் மனநல ஆலோசகராக செயல்பட வைக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தமிழக அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பணியைப் பள்ளி கல்வித் துறை வழங்கவிருக்கிறது.

மண்டலத்துக்கு 30 ஆசிரியர்கள் வீதம் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் பணியில் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். இதுபோக கரோனா தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

தனிமனித இடைவெளியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது, முகக்கவசம் அணிவதன் அவசியத்தையும் அணியத் தவறினால் விதிக்கப்படும் அபராதம் குறித்தும் விளக்குவது மற்றும் பெருந்தொற்றின் விளைவுகளையும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய பணிகளில் இந்த ஆசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள்.

காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு பிரிவு ஆசிரியர்களும், மதியம் 2 மணி தொடங்கி இரவு 8 மணி வரை இரண்டாவது பிரிவு ஆசிரியர்களும் இந்தப் பணியில் ஈடுபடவிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலப் பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு சென்னையைச் சேர்ந்த தமிழக அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x