Published : 06 Jun 2020 05:58 PM
Last Updated : 06 Jun 2020 05:58 PM

ஊரடங்கு முடிவுக்குப் பிறகு வகுப்பறைக் கற்றல் மாறப்போகிறது: மத்திய கல்வித்துறைச் செயலர் 

ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு வகுப்பறைக் கற்றல் மாறிவிடும் என்று மத்திய கல்வித்துறைச் செயலர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலாளர் அனிதா கார்வால் காணொலிக் கருத்தரங்கத்தின் வழியே செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் உள்ள 24 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்குக்குப் பின்னதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமான விஷயங்களைச் சமாளிக்க வேண்டியதாக இருக்கும்.

பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போது தனிமனித விலகலைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

வகுப்பறைக் கற்றலில் ஏராளமான மாற்றங்கள் முன்னெடுக்கப்படும். இதுவரை தள்ளிப் போடப்பட்ட டிஜிட்டல் கல்வியின் தரத்தை உயர்த்துவதன் முக்கியத்துவத்தை கரோனா பேரிடர் உணர்த்தியுள்ளது.

அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடப் புத்தகங்களை வீடுகளுக்கே சென்று வழங்குமாறு வலியுறுத்தியுள்ளோம். அச்சடித்தலோ, போக்குவரத்து வசதியோ தளர்த்தப்படாத மாநிலங்களில் உள்துறை அமைச்சகத்தை நாடக் கோரியுள்ளோம்'' என்று அனிதா கார்வால் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x