Last Updated : 06 Jun, 2020 07:22 AM

 

Published : 06 Jun 2020 07:22 AM
Last Updated : 06 Jun 2020 07:22 AM

சிகரத்தை தொட்டால் வேலைவாய்ப்பு தேடி வரும்- சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் முனைவர் ரமணன் உறுதி

ரமணன்

சென்னை

அனைத்து துறைகளிலும் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சிகளை வானிலைத் துறை பயன்படுத்திக் கொள்கிறது. ஆகையால் இத்துறையில் சிகரத்தை தொட்டால் வேலைவாய்ப்பு தேடி வரும் என்று சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் முனைவர் ரமணன் தெரிவித்தார்.

தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றத்துடன் (என்டிஆர்எஃப்) இணைந்து ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் நடத்தும் ‘விஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற5 நாள் இணைய வழி பயிலரங்கத்தின் இரண்டாவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் முனைவர் ரமணன், ‘வானிலைவிஞ்ஞானி ஆவது எப்படி?’ என்ற தலைப்பில் பேசியதாவது:

வெயிலையும் மழையையும் கணிப்பது மட்டுமே வானிலைத் துறையின் வேலை இல்லை. பல்வேறு துறைகளோடும் பலதரப்பட்ட விஷயங்களோடும் இத்துறைக்குத் தொடர்பு உண்டு. அன்றாடம் காற்று, அழுத்தம், வெப்பம்,மழை உள்ளிட்டவற்றைக் கணித்துத் தெரிவிப்பது வானிலை அறிக்கை. அதுவே 30 ஆண்டுகள்இவற்றின் இயக்கத்தை கணக்கிட்டு பகுப்பாய்வு செய்து தெரிவிப்பது காலநிலை எனப்படுகிறது.

இத்துறையில் அடிப்படையாக உள்ளது உதவியாளர் பணி மற்றும் அதிகாரிப் பணி என்கிறஇரண்டு விதமான பணிவாய்ப்புகள். இதில் காற்றின் உயரம், திசை,வேகம், அழுத்தம், வெப்பம் ஆகியவற்றின் தரவுகளைப் பதிவு செய்பவர் உதவியாளர். இப்படி சேகரிப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர் அதிகாரி. இந்தபணிகளை மேற்கொள்ள ரேடார்கள், பலூன்கள், செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுவதால்மின்னணு துறை வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் இத் துறைக்குத் தேவைப்படுகிறார்கள். கிராஃபிக்ஸ் வடிவத்தில் வானிலைஅறிக்கை தயார்ப்படுத்தப்படுவதால் கணினி பொறியாளர்களும் இத்துறைக்கு அவசியம்.

வேளாண்மை, முப்படை,அணை கட்டுமானம், தொழிற்சாலை புகைப்போக்கியை நிர்மாணித்தல் உள்ளிட்ட பலவற்றுக்குக் காலநிலை தரவுகளும் வானிலை நிபுணர்களும் அத்தியாவசியமாகும். இயற்பியல், கணிதம், பொறியியல், அட்மாஸ்ஃபியரிக் சயின்ஸ், வேளாண்மை வானிலை படிப்பு உள்ளிட்டவற்றை நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் படித்தால் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் மட்டுமல்லாது இஸ்ரோ, பாபா அணு ஆராய்ச்சி மையம், ஐஐடி, தேசிய பாதுகாப்புத் துறை, தேசிய அணுமின் கழகம் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களிலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யும் தனியார் மற்றும் அரசு துறை நிறுவனங்களிலும் அயல்நாட்டு காலநிலை ஆராய்ச்சிநிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எந்த துறையானாலும் சிகரத்தைத் தொட்டால் வேலைவாய்ப்பு உங்களைத் தேடி வரும் என்றார்.

இணைய வழி பயிலரங்கம் தொடர்ந்து ஜூன் 6, 7, 8 ஆகிய நாட்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.

இதில் என்டிஆர்எஃப் இயக்குநர் விஞ்ஞானி வி.டில்லிபாபு, முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், முனைவர் பி.வெங்கட்ராமன் ஆகியோரும் உரை நிகழ்த்த உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x