Last Updated : 03 Jun, 2020 04:49 PM

 

Published : 03 Jun 2020 04:49 PM
Last Updated : 03 Jun 2020 04:49 PM

பேராசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு ரத்து: ஏஐசிடிஇ ஒப்புதல் ரத்தாகும் அபாயம்

பேராசிரியர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் பாரதியார் பல்கலைக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு ரத்தாகியுள்ளதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. விதிகளை மீறினால் பல்கலைக்கூடம் பெற்றுள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் ஒப்புதல் ரத்தாகும் அபாயம் எழுந்துள்ளது. இதைத் திரும்ப பெறக் கோரி வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன.

புதுச்சேரி அரியாங்குப்பம், பாரதியார் பல்கலைக்கூடம் தொடங்கி 32 ஆண்டுகள் ஆகின்றன. தென்னிந்தியாவில் ஓவியம், நடனம் மற்றும் இசை ஆகிய துறைகள் ஒரே கல்லூரியில் இயங்குவது புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் மட்டுமே.

பாரதியார் பல்கலைக்கூடம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE ) ஒப்புதல் பெற்ற கல்வி நிறுவனமாகும். கடந்த 32 ஆண்டு காலமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளின்படி பல்கலைக்கூடத்தின் நுண்கலைத் துறை முதலாண்டு மாணவர் சேர்க்கை, நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு சென்டாக் வெளியிட்டுள்ள விளக்கக் கையேட்டில் மேற்சொன்ன நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஏஐசிடிஇ விதிகளை மீறிய செயலாகும். பல்கலைக்கூட நுண்கலைத் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் யாரிடமும் கலந்தாலோசிக்காமல் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலர் சுகுமாரன் கூறுகையில், "புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் நுண்கலைத்துறை முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததைத் திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று விதிகளை மீறினால் பல்கலைக்கூடம் பெற்றுள்ள ஏஐசிடிஇ ஒப்புதல் ரத்தாகும். மேலும், புதுவைப் பல்கலைக்கழக இணைப்பும் ரத்தாகும். இதனால், பல்கலைக்கூட நுண்கலைத் துறையில் கற்பிக்கப்படும் பாடங்கள் செல்லாதவையாகி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.

பல்கலைக்கூடத்தில் மாணவர் நலன் பாதிக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்ற நிர்வாகக் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இதற்குக் காரணமான அதிகாரிகள் யாரென்று கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, புதுச்சேரி அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மீண்டும் பல்கலைக்கூட நுண்கலைத்துறை முதலாண்டு மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு மூலம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x