Published : 03 Jun 2020 02:20 PM
Last Updated : 03 Jun 2020 02:20 PM

பள்ளிகள் திறப்பு; வல்லுநர் குழுவை மாற்றி அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்குக் கோரிக்கை

“பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வைத் தள்ளிவைத்தால் மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்திருக்கும் நிலையில், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் இவர்களின் ஆலோசனைகளைப் பெற்று பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் - அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் நீ.இளங்கோ, “கரோனா நோய்த் தொற்றுப் பரவலின் அசாதாரண சூழலில் கல்வித்துறை எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசனைகள் வழங்க வல்லுநர் குழு ஒன்றைத் தமிழக அரசு கடந்த மாதம் அமைத்தது. பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட அந்தக் குழுவானது 15 நாள்களுக்குள் தனது பரிந்துரைகளை அளிக்கவும் பணிக்கப்பட்டது. ஆனால், இரண்டு வாரம் கழித்து 29.5.20-ல், வல்லுநர் குழுவில் கூடுதலாக சில உறுப்பினர்களைச் சேர்த்து, பரிந்துரைகளை வழங்க மேலும் ஒருவார காலம் கூடுதல் அவகாசம் அளித்தது தமிழக அரசு.

ஆனால், லட்சக்கணக்கான மாணவர் கற்கும் அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோ, அரசுப் பள்ளி ஆசிரியர்களோ, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களோ ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளோ வல்லுநர் குழுவில் சேர்க்கப்படவில்லை. கரோனாவால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகித் தவித்துக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் நிலையையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் தெரிந்த ஆசிரியர் எவருமே குழுவில் இல்லாதபோது யாருக்கான பரிந்துரைகளை குழு அளிக்க இயலும்?

பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவரின் பெற்றோர் சமுதாயத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள். கரோனா பாதிப்பால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை எல்லாம் இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். மாணவர்கள் கடந்த இரு மாதங்களாக விடுதி உணவும், மதிய உணவும் கிடைக்காமல் அரைப் பட்டினியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மாணவர்களின் பொருளாதார நிலையையும், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மன நிலையையும் அறிந்த ஆசிரியர்களால் மட்டுமே உகந்த பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க இயலும்.

அத்துடன், ஆதி திராவிடர் நல, பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர், குறிப்பாக உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் மலைப் பிரேதசங்களிலும், ஒதுக்குப்புற கிராமங்களிலும் வசிப்பவர்கள். கடந்த இரண்டு மாதங்களாக பெற்றோர் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில், இந்த மாணவர்கள் கூலி வேலைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களது இயலாமைகளும், பிரச்சினைகளும் நகரங்களில் அனைத்து வசதிகளுளும் கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை.

தமிழக அரசு, கணினிகள், ஸ்மார்ட் போன்கள் மூலமாக பாடத்திட்டத்தின் கணிசமான பகுதியை இணைய வழியில் நடத்தத் திட்டமிடுவதாகவும் செய்திகள் வருகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக அவ்வாறு பொதுத் தேர்வுக்கான தயாரிப்புகளும் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவை எல்லாம் நாம் மேலே சொன்ன அரசு, அரசு உதவி பெறும், ஆதி திராவிடர் நல, பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்களைச் சென்றடையும் வாய்ப்பே இல்லை.

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளே இல்லை. அங்கு படிக்கும் மாணவர்களின் வீடுகளில் ஸ்மார்ட் போன்கள் வாங்கிக் கொடுக்கும் வசதியும் இல்லை. எனவே, இத்தகைய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துத்தான் அரசின் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் வல்லுநர் குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதில் அனைவராலும் மதிக்கப்படும் கல்வியாளர்கள், அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் பரிந்துரைகளை வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் பொது மக்களின் கருத்துகளையும் கேட்டுப் பெற்று அதனடிப்படையிலேயே பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x