Published : 02 Jun 2020 06:40 am

Updated : 02 Jun 2020 06:40 am

 

Published : 02 Jun 2020 06:40 AM
Last Updated : 02 Jun 2020 06:40 AM

‘இந்து தமிழ் திசை’யின் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி- வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்: கல்வியாளர்கள், நிபுணர்கள் தகவல்

hidher-studies-workshop

சென்னை

வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்று ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி முகாமின் முதல் அமர்வில் கல்வியாளர்கள், நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஆன்லைனில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது. அந்த வகையில், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக, ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன் தொடர் வழிகாட்டி நிகழ்ச்சியை தற்போது தொடங்கி உள்ளது.

இதன் முதல் அமர்வாக, ‘உயர்வுக்கு வேளாண் கல்வி’ என்ற நிகழ்ச்சி கடந்த 31-ம் தேதி (ஞாயிறு)மாலை நடந்தது. இதில் கல்வியாளர்கள், நிபுணர்கள் பேசியதாவது:

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன்: படிக்காதவர்கள்தான் விவசாயம் செய்வார்கள் என்ற நிலை மாற வேண்டும். படித்தவர்களும் விவசாயம்செய்ய வேண்டும். வேளாண்மைக்கு மத்திய, மாநில அரசுகள் முன்னுரிமை தரவேண்டும்.

சமீபகாலமாக, பலரும் குறிப்பாக மாணவிகள் வேளாண் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். தோட்டக்கலை படிக்க விரும்பினால், இளங்கலை வேளாண் படிப்பு படித்துவிட்டு முதுநிலையில் தோட்டக்கலையில் சேரலாம். வருங்காலத்தில் விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால், வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு நிச்சயம் அதிக வாய்ப்புகள் இருக்கும்.

தமிழக அரசின் முதன்மைச் செயலர், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ்: தமிழகத்தில் 14 அரசு விவசாயக் கல்லூரிகள், 28 தனியார்வேளாண் கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, நிகர்நிலை பல்கலைகளிலும் வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகள் உள்ளன. பிஎஸ்சி விவசாயப் படிப்பில் 3,788 இடங்கள், தோட்டக்கலை படிப்பில் 482 இடங்கள் உள்ளன. பி.டெக்.கில் வேளாண்மை பொறியியல், உணவு தொழில்நுட்பம், பிஎஸ்சி-யில் பட்டுப்புழு வளர்ப்பு, வனவியல் போன்றவற்றிலும் கணிசமான இடங்கள் உள்ளன.

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் பாடங்கள் படித்தவர்கள் பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்டவற்றிலும், கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் பிடெக் வேளாண்மை பொறியியலிலும் சேரலாம்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி மூலம் 200 அல்லது 300 வேளாண் அலுவலர், தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விவசாயம், தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நபார்டு வங்கி,ரிசர்வ் வங்கி, காப்பீடு நிறுவனங்களில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. உரம், பூச்சிக்கொல்லிதயாரிப்பு, விதை உற்பத்தி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

அமிர்தா ஸ்கூல் ஆஃப் அக்ரிகல்சுரல் சயின்ஸ் தலைமை ஆராய்ச்சியாளர், பேராசிரியர், முதுநிலை திட்டத் தலைவர் டாக்டர்சுதீஷ் மனலில்: அமிர்தாவில் பிஎஸ்சி விவசாயப் படிப்பில் 120 இடங்கள் உள்ளன. புகழ்பெற்ற கல்வியாளர்கள், நவீன தொழில்நுட்பம், சர்வதேச தரம், செயல்முறை கல்வி போன்றவை எங்கள் சிறப்பு அம்சங்கள். இங்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிகவுன்சில் (ஐசிஏஆர்)வரையறுத்துள்ள பாடத்திட்டத்தை சர்வதேசதரத்தில் பயிற்றுவிக்கிறோம்.

புத்தகம் சார்ந்த படிப்பாக அன்றி, முழுமையாக களப்பணியாகவே கற்றுத் தருகிறோம். இந்திய வேளாண் முறையோடு, சர்வதேசவேளாண் முறைகள், தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடுகளையும் சொல்லித் தருகிறோம். ரோபோட்டிக் முறையில் விதை விதைப்பு, நவீன வேளாண் கருவிகளைப் பயன்படுத்தி அறுவடை செய்வது போன்றவற்றை வயல்வெளிக்குச் சென்று மாணவர்கள் கற்கின்றனர். நீர்ப்பாசன முறைகள், மழைநீர் சேகரிப்பு முதலியவற்றை நேரில் தெரிந்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த அமர்வில், பிளஸ் 2 முடித்தஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில்களைப் பெற்றனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

உயர்வுக்கு உயர்கல்விஇந்து தமிழ் திசைவழிகாட்டி நிகழ்ச்சிவேளாண்மைதோட்டக்கலைகல்வியாளர்கள்நிபுணர்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author