Last Updated : 31 May, 2020 08:45 PM

 

Published : 31 May 2020 08:45 PM
Last Updated : 31 May 2020 08:45 PM

'ரைட்ஸ் மேனேஜர்' பாதுகாப்பு குறைபாட்டை சுட்டிக்காட்டிய மதுரை மாணவர்: 1000 டாலர் பரிசு வழங்கிய பேஸ்புக் நிறுவனம்

மதுரை

பேஸ்புக் ரைட்ஸ் மேனேஜரில் உள்ள குறையைக் கண்டறிந்து நீக்க உதவிய மதுரை மாணவருக்கு 1000 டாலர் பரிசு வழங்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

இதனையறிந்து அந்த மாணவரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

ஆன்ட்ராய்டு செல்போன் பயன்பாடு என்பது இன்றைய காலகட்டத்தில் அத்தியவாசியத் தேவையில் ஒன்றாகிவிட்டது. இதன் பயன்பாடு பற்றி முழுமையாகத் தெரியாதவர்களும் அவற்றை அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்.

அந்த வகையில் செல்போன் பயன்பாட்டில் எத்தனையோ வசதிகள் இருந்தாலும், சில சறுக்கல் இருக்கத்தான் செய்கின்றன. தகவல் திருட்டு, ஊடுருவல் போன்ற ஆபத்துகளும் உள்ளன.

அதுவும் மொபைல் ஃபோன் வழியாக சமூகவலைதளங்களைப் பயன்படுத்தும் போது இத்தகைய ஆபத்து அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பேஸ்புக்கில் ரைட்ஸ் மேனேஜர் என்ற பிரிவிலுள்ள சில பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய மதுரை மாணவர் டி.கே.கிஷோர் என்பவரை பேஸ்புக் நிறுவனம் பாராட்டி, 1000 டாலர் பரிசு வழங்கி உள்ளது.

இது குறித்து மாணவர் கிஷோர் கூறியதாவது: மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசிக்கிறேன். தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் பயில்கிறேன்.

ஏற்கெனவே கூகுள் மைக்ரோ சாப்ட்வேர் தளங்களிலுள்ள சில சிறிய தவறுகளைக் கண்டறிந்து, அதற்கு பரிசு வாங்கியுள்ளேன். தற்போது ‘பேஸ்புக் ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் அடுத்தவரின் தகவல்களைப் பார்ப்பது போன்ற தவறுகளைக் கண்டறிந்தேன்.

தனியார் ஊடக நிறுவனங்கள் பேஸ்புக் வாயிலாக செய்திகள், ஆடியோ, வீடியோக்களைப் பகிர்கின்றன.

இத்தகைய நிறுவனங்கள் ரைட்ஸ் மேனேஜர் என்ற வசதியை பேஸ்புக் மீடியாத்துறையை தொடர்பு கொண்டு ஆக்டிவ்வேட் செய்து பயன்படுத்துகின்றன.

இதுபோன்ற தனியார் நிறுவனங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றும் வீடியோ, ஆடியோக்களுக்கு காப்புரிமை கோரலாம். அவ்வாறு காப்புரிமை பெற்ற வீடியோ, ஆடியோக்களை வேறு நபர்கள் தங்களது பேஸ்புக் பக்கங்களில் பிரைவேட், பப்ளிக் என்ற பிரிவில் பதிவேற்றம் செய்யலாம்.

ஆனால், பிரைவேட் பிரிவில் பதிவேற்றம் செய்யும் போது, பதிவேற்றம் செய்த நபரின் விவரங்கள் காப்புரிமையைப் பெற்ற வீடியோ, ஆடியோ உள்ளிட்ட படைப்புகள் கிரியேட்டரின் பேஸ்புக்கில் காண்பிக்கக் கூடாது. இது தவறு என்பதை அறிந்தேன்.

பதிவேற்றம் செய்தவரின் விவரங்கள் தெரியாமல் இருக்கவே பிரைவேட் என்ற வசதி இருக்கும்போது அங்கே அவரின் விவரங்களைக் காட்டுவது தவறானது. இது அந்த தனியார் நிறுவனத்தின் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட வழிவகுக்கும். எனவே, ரைட்ஸ் மேனேஜரிலுள்ள இது போன்ற தவறுகளை நீக்கவேண்டும் என, பேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் தந்தேன்.

முதலில் யோசித்த அந்நிறுவனம், பிறகு எனது தகவலை ஆய்வுசெய்து உண்மை என, நம்பியது. நான் சுட்டிக்காட்டியை பிழைகளை சரி செய்ததோடு, என்னைப் பாராட்டி 1000 டாலரை (ரூ. 77 ஆயிரம்) பரிசாக வழங்கியது.

இது பற்றி அறிந்த மதுரை நகர் காவல் ஆணையரும் என்னை நேரில் அழைத்து பாராட்டினார், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x