Published : 30 May 2020 05:46 PM
Last Updated : 30 May 2020 05:46 PM

பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க 'டேக் இட் ஈசி' திட்டம்: தினசரி இலவச ஆலோசனை

தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று அச்சத்தால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழலில், தெற்காசிய நாடுகளில் மட்டும் 43 கோடி குழந்தைகள் இடைநிற்றல் அபாயத்தில் இருப்பதாக யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

2 நிமிடத்தைக் கூட ஓரிடத்தில் செலவழிக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும் சிறுவர்கள், இரண்டு மாதங்களுக்கும் மேலாக வீடுகளில் அடைபட்டுள்ளனர். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 15-ல் தொடங்குகின்றன. தேர்வை எதிர்கொள்ளும் அவர்களுக்குப் பதற்றம் ஏற்படுவது இயல்பே. அவர்களுக்குள் ஏற்படும் பதற்றம், உளவியல் சிக்கல்கள், அழுத்தத்தைப் போக்க டேக் இட் ஈசி என்ற திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயன் பெற 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும். சில நிமிடங்களில் செல்பேசிக்குத் தானியங்கி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் டேக் இட் ஈசி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் இந்தக் கதை நீடிக்கிறது.

டேக் இட் ஈசி தேன்மொழி என்ற பெயரில் இனிமையான பெண் குரல், மாணவர்களின் பதற்றம் தணிக்கிறது. தினம் ஒரு கதையாக 30 நாட்களுக்கான கதைகள் தயார் செய்யப்பட்டு ஒலிபரப்பப்படுகின்றன. இந்த எண்ணை அழைக்கும் மாணவர்கள் அந்தந்த நாளுக்கான கதையைக் கேட்கலாம். கதை முடிவில் சில கேள்விகளும் கேட்கப்படுகின்றன. அவற்றுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

’என்ன கொடுமை சரவணன் சார்?’, ’போதும் இதோட நிறுத்திக்க!’ என்பன உள்ளிட்ட சினிமா வசனங்களோடு கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் தங்கள் வாழ்வியலோடு எளிதில் கதைகளை உள்வாங்க முடியும்.

எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் போன் வசதி இருக்காது என்பதால் சாதாரண போன் அழைப்புகளுக்குத் தானியங்கி பதில் அளிக்கும் விதமாக இந்தத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் பள்ளி மாணவர்கள் தவிர்த்து, அனைத்துக் குழந்தைகளுமே இந்த டேக் இட் ஈசி கதைகளைக் கேட்டு மகிழலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x