Last Updated : 27 May, 2020 04:16 PM

 

Published : 27 May 2020 04:16 PM
Last Updated : 27 May 2020 04:16 PM

புதுச்சேரியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்புத் தேர்வு; ஜூலை முதல் வாரத்தில் கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு

புதுச்சேரி, காரைக்காலில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம் என்று புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு புதுச்சேரி பள்ளிக்கல்வி இயக்கம் சார்பில் காணொலி காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித்துறை வளாகத்தில் உள்ள மெய்நிகர்க் கட்டுப்பாட்டு அறையில் நடந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சியில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஆசிரியர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

ஒளிப்பதிவு செய்த பாடங்கள், கேள்வி, பதில்கள் கல்வித் துறையின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரத்து 844 பேர் யூடியூப் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். யூடியூப் வழியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 226-ஐக் கடந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க இணையவழியாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மே 24-ம் தேதி வரை 1,68 கல்லூரி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கல்வித்துறை தொடர்பாக புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக் கண்ணனிடம் கேட்டதற்கு, "தமிழக அரசு அறிவித்துள்ள தேதிகளில் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெறும். சமூக இடைவெளியுடன் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். தமிழக அரசைப் பின்பற்றியே புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு இருக்கும்..

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். தொடர்ந்து இது தொடர்பான புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் பெற்றோர்கள் முன்வந்து புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

உயர்கல்வித் துறை செயலர் அன்பரசுவிடம் கேட்டதற்கு, "பல்கலை மானியக் குழு (யுஜிசி) பரிந்துரையின் பேரில் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும். ஜூலை முதல் வாரம் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும். முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் அவர்கள் கடந்த செமஸ்டர்களின் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அடுத்த வகுப்புக்கு செல்வார்கள். ஆகஸ்ட் 1 முதல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x