Published : 19 May 2020 01:26 PM
Last Updated : 19 May 2020 01:26 PM

ராமேசுவரம் அருகே வாட்ஸ் அப் மூலம் கோயில் கட்டிடக்கலை பயிற்சி பெற்ற மாணவர்கள்

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாட்ஸ் அப்’ மூலம் கோயில் கட்டிடக்கலை குறித்து பயிற்சி பெற்றனர்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால் வீட்டிலேயே அடை பட்டிருக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு இந்தாண்டு கோயில் கட்டடக்கலை – ஓர் அறிமுகம் என்ற பயிற்சிமுகாமை ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகமும், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனமும் இணைந்து வாட்ஸ்அப் செயலி மூலம் 08.05.2020 முதல் 18.05.2020 வரை 11 நாட்கள் இப்பயிற்சியை நடத்தின.

பயிற்சியை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு நடத்தினார்.

கோயில்களின் தோற்றம், அதன் அமைப்பு, விமானம், கோபுரம் இவற்றின் உறுப்புகள் அவற்றின் வகைகளை பாண்டிய நாடு, சோழநாட்டுக் கோயில்களின் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன் விளக்கிக் கூறினார்.

கோயில் படங்களில் அதன் உறுப்புகளின் பாகங்கள் குறித்து விளக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் அவர்கள் கற்றுக்கொண்டவற்றிலிருந்து வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது.

கோயிலின் பாகங்களை வரைந்து அவற்றின் பெயர்களைக் குறித்தல், கோயில் அமைப்பை விளக்கி கட்டுரை எழுதுதல் ஆகிய செயல்பாடுகளில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று பயின்றுள்ளனர்.

இப்பயிற்சியில் திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ராமநாதபுரம் மகளிர் கல்லூரி மாணவிகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், தொல்லியல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் வி.சிவகுமார், இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், அடுத்த கட்டமாக தமிழ் பிராமி கல்வெட்டுகள் படிக்கும் பயிற்சியும் இணைய வழியில் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x