Published : 18 May 2020 05:31 PM
Last Updated : 18 May 2020 05:31 PM

குட்டிக் கதை 29: கரோனாவைப் பாத்து கவலைப்படாதீங்க!

அந்தக் காட்டுல இருந்த விலங்குகளும் பறவைகளும் ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. எல்லாம் ஏதோ ஜாலியா பேசிட்டு இருந்தாங்க.

“என்னப்பா, எல்லோரும் கூட்டமா உட்கார்ந்து என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே அங்கே வந்தது முயல்.

“இப்போ திடீர்ன்னு கொஞ்ச நாளா தூய்மையான காத்து வீசுது, ஆற்றுல சுத்தமான தண்ணி ஓடுது, சர், சர்ன்னு வண்டிங்க போற இரைச்சல் இல்லாம இருக்கே, இவ்ளோ நல்ல விஷயங்கள் திடீர்ன்னு நடக்குதே, அதான் என்ன காரணமா இருக்கும்ன்னு யோசிச்சிட்டு இருந்தோம்” என்றது மான்.

“இது தெரியாதா உனக்கு, இப்போ இந்த உலகத்தில பல இடங்களில் கரோனா வைரஸ் நோய் வந்துருக்கு. அதனால மனுஷனுங்க வெளியே வர்றதே இல்ல, அதனாலதான் நீ சொன்ன எல்லா நல்ல விஷயங்களும் நடக்குது. இப்போ நாமளும் பயப்படாம வெளிய நடமாடவும் முடியுது” என்றது குதிரை.

அப்போது ‘ம்மே’, ‘ம்மே’ என்று கத்திக் கொண்டே வந்தது ஆடு.

ஆட்டைப் பார்த்தவுடன் ‘கொல்’ என்று சிரித்தது நரி.

“என்ன நரியாரே, என்னைப் பார்த்து ஏன் அப்படி சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டது ஆடு.

“இல்ல, உன்னைப் பார்த்ததும் ‘ஆட்டுத் தும்மல்’ன்னு ஒண்ணு சொல்வாங்களே, அது நினைவு வந்தது. அதான் சிரிச்சேன்” என்றது நரி.

“இதுல என்ன சிரிப்பு வேண்டி கெடக்கு இப்போ” என்றது மான்.

“மனுஷங்க இப்போ தும்மல் சத்தம் கேட்டாலே அலறி அடிச்சி ஓடறாங்க, அதை நினைத்துத்தான் சிரிச்சேன்” என்றது நரி.

“தும்மல் சத்தம் கேட்டா ஏன் மனிதர்கள் பயப்படறாங்க?” என்று கேட்டது முயல்.

“கரோனா வைரஸ் முதல்ல மனுஷங்களோட நுரையீரலைத்தான் தாக்குதாம். அதனால தும்மல் சத்தம் கேட்டாலே ஜனங்க பயந்து போறாங்க. சளி, தும்மல், மூச்சு விட சிரமம் இதெல்லாம் இருந்தா உடனே டாக்டர்கிட்ட போகணுமாம். ஏன்னா, இதெல்லாம்தான் அந்த நோயோட அறிகுறியாம்” என்றது குதிரை.

“ஆமாம், எதிர்ப்பு சக்தி கொறைவா இருக்கறவங்க, ஏற்கனவே நீண்ட நாளா வேற நோய் இருக்கறவங்களுக்கெல்லாம் இது ஈஸியா பரவுதாம். அதனால தன்னோட தும்மலால அந்த கிருமி மத்தவங்களுக்குப் பரவக் கூடாதுன்னு மனுஷங்க முகத்தில மாஸ்க் போட்டுகிட்டு இருக்காங்க.”

“சபாஷ், நீ சொல்றது ரொம்ப கரெக்ட், நாம நல்லா இருந்தாலும்கூட, எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கற மத்தவங்களுக்கு நம்மால எதுவும் பரவக் கூடாதுன்னு நினைக்கறது நல்லது தானே” என்று கூறி கை தட்டியது குரங்கு.

அப்போது ‘ங்கா,ங்கா’ என்ற பிளிறல் ஓசையோடு தனது துதிக்கையை ஆட்டியபடி வந்தது யானை.

“யப்பா, இப்போ தான் நிம்மதியா மூச்சு விட முடியுது” என்று கூறியது யானை.

“என்ன சொல்றீங்க யானை அண்ணா?”

“ஆமாம், இப்போ உலகம் முழுவதும் மக்கள் வெளியே வருவது குறைந்து இருக்குல்ல, அதனால வண்டிங்க போறதும் கொறஞ்சிடுச்சு. அதனால காற்று இப்போ ரொம்ப சுத்தமா இருக்கு இல்ல, அதான், நல்ல காற்றை சுவாசிக்க முடியுது, அதைத்தான் சொன்னேன்” என்றது யானை.

கனைத்துக் கொண்டே அங்கு வந்த குதிரை “ ஆமாம், ஆமாம், இப்போது நான்கூட கடிவாளம் போடாமலே எங்க வேணும்னாலும் சுத்தலாம் போல இருக்கு, எல்லா இடமும் அவ்வளவு சுத்தமாவும் ஃபிரீயாவும் இருக்கு” என்று சந்தோஷமாகக் கூறியது.

“ஆமாம், ஆத்து தண்ணிகூட ரொம்ப சுத்தமா இருந்துது, நான் கூட எந்த தொந்தரவும் இல்லாம தண்ணி குடிச்சிட்டு வந்தேன்” என்று மாடு கூறியது.

“கரோனா பாதிப்பு கொறஞ்ச பிறகும்கூட மக்கள் இது மாதிரியே காற்று, நீர் இதையெல்லாம் அசுத்தப்படுத்தாம இருந்தா நல்லா இருக்கும், நாமும் சந்தோஷமா இருக்கலாம்” என்று கூறியது கரடி.

“இந்த கரோனாவால எல்லாம் சுத்தமாயிடுச்சு, அதனால கரோனாவிற்கு நன்றி” என்றது நரி.

இதைக் கேட்ட முயல் ‘ஓ’ வென்று அழ ஆரம்பித்தது.

“நான் எதுவும் தப்பா சொல்லலையே, இப்போ நீ எதுக்கு அழற?” என்று வருத்தத்துடன் கேட்டது நரி.

“இந்த கரோனாவால எவ்வளவு மக்கள் இறந்திட்டாங்களாம், தெரியுமா, ஆனா நீ அதுக்கு போய் நன்றி சொல்றயே”

“சொல்ற பேச்சை கேக்கலன்னா இந்த ஜனங்க இப்படித்தான் அவஸ்தைப் படணும், 1.வெளியே போகாதீங்க, 2. அவசியமாப் போக வேண்டிய தேவை ஏற்பட்டா கூட மாஸ்க் போட்டுட்டு போங்க, 3. மூன்று அடி தூர இடைவெளியைக் கடைப்பிடிங்க, 4. கைகளை சோப் தண்ணீரால அடிக்கடி கழுவுங்க, அப்படீன்னு இந்த நாலு விஷயங்களைத் தானே சொல்றாங்க, இதை முதல்லயே கடைபிடிச்சிருந்தா இவ்வளவு கஷ்டம் வராதில்லை” என்றது குரங்கு.

“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே’ அப்படீன்ற தாயுமானவர் பாட்டுக்கு ஏத்தமாதிரி மக்கள் கஷ்டப்படறதை பார்த்து நீ அழுவுறது புரியுது, குரங்கு சொன்ன 4 விஷயங்களை இன்னும் சில நாள் கடைப்பிடிச்சா போதும், எல்லாம் சீக்கிரம் சரியாயிடும், அதனால நீ வருத்தப்படாதே” என்று முயலுக்கு ஆறுதல் கூறியது யானை.

“எல்லாம் சரியான பிறகு நாம்ப மறுபடி ஒரு மீட்டிங் போடலாம், இப்போ கெளம்பலாம்” என்று கூறியவாறே அனைத்து விலங்குகளும் அவரவர் இருப்பிடத்துக்கு சென்றன.

நீதி : நன்மை தரும் விஷயங்களை யார் சொன்னாலும் அதைக் கேட்டு பின்பற்றி நடக்க வேண்டும்.

-கலாவல்லி அருள், தலைமையாசிரியர்

அரசினர் உயர் நிலைப் பள்ளி, திருக்காலிமேடு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x