Published : 18 May 2020 01:30 PM
Last Updated : 18 May 2020 01:30 PM

பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணையவழி தொழில்துறை 4.0 சான்றிதழ் படிப்பு அறிமுகம்

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில், இணையவழி தொழில்துறை 4.0 சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து துணைவேந்தர் பெ.காளிராஜ் கூறியதாவது:

''தொழில்துறையில் ஏற்பட்டு வரும் புரட்சியானது, இவ்வுலகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. இச்சூழலில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் உயர்கல்வியை, வளர்ந்து வரும் தொழில்துறைக்கு இணையான ஒரே நேர்க்கோட்டில் நிலை நிறுத்த வேண்டியுள்ளது.

தொழில்துறை சார்ந்து மாணவர்களுக்குத் தங்களைச் சுற்றி நிகழும் நிலையற்ற, நிச்சயமற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற நிலையை அறிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்வதற்கான திறனை வளர்த்து அவர்களை நெறிப்படுத்துவது உயர்கல்வி நிறுவனங்களின் கடமையாகும்.

மாணவர்களுக்கு தொழில்துறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அங்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், அவற்றின் பயன்கள் பற்றி திறன் சார்ந்த பயிற்சியை அளிப்பது அவசியமாகிறது. இதைக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கொண்டுச் செல்வது காலத்தின் கட்டாயமாகும்.

அந்த வகையில் பாரதியார் பல்கலைக்கழகம் 'தொழில்துறை 4.0 ' (Certificate Programme in Introduction to Industry 4.0) என்ற இணையவழிச் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்தப் படிப்பு பிக் டேட்டா, டேட்டா அனலிட்டிக்ஸ், ஆர்ட்டிஃபீசியல் இன்டெலிஜன்ஸ், இண்டர்நெட் ஆப் திங்ஸ், ஆக்மென்டட் ரியாலிட்டி, டிசைன் திங்கிங், சைபர் செக்யூரிட்டி, பிளாக்செயின், கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகிய பாடங்களை உள்ளடக்கியது.

ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையினர் மூலமாக இப்படிப்பு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட உள்ளது. பயிற்சிக் காலத்தில் மாணவர்கள் இரு திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி வகுப்பின் முடிவில் இணையவழியில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை குறித்த விவரம், வகுப்பு தொடங்கும் நாள் குறித்த விவரங்கள் www.b-u.ac.in, www.budca.in/cpii4 என்ற பாரதியார் பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்''.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x