

மாணவர்கள் அவரவர்கள் படித்த பள்ளிகளிலேயே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
10-ம் வகுப்பு பொதுத்தேர்வையொட்டி, பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்த பள்ளியில்படித்தார்களோ அந்தப் பள்ளியிலேயே தேர்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு தேர்வு மையத்தில் 10 பேர் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படித்த மாணவர்களை தேர்வு தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வர இ-பாஸ் வசதி பெற கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கப்படும். தேர்வு கண்காணிப்பு பணியில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளின் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படுகிறது. இதற்கு விவசாயிகள் 50 சதவீதம் பிரிமியத்தை செலுத்தினால் போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.