

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஒ.சுந்தரமூர்த்தி இன்று (மே 14) கூறியிருப்பதாவது:
"கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு நடத்தப்படாத பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சில பாடங்களுக்கான பொதுத் தேர்வை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நடத்த அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்தவுடன், பலரும் தொழில் நிமித்தமாக தங்கி உள்ள மாவட்டங்களில் இருந்து, தங்களது சொந்த ஊர்களுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் சென்றுவிட்டனர். இனி அவர்கள் பழையபடி, மீண்டும் இங்கு வந்து குழந்தைகளை அழைத்து வந்து தேர்வெழுத வைப்பது என்பது சாத்தியமற்றது. கரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப காலமான, மார்ச் 24-ம் தேதி நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வின் ஒரு பாடத்துக்கு ஏராளமானோர் தேர்வு எழுத வரவில்லை என்பதை கல்வித்துறை கவனிக்க வேண்டும்.
10-ம் வகுப்பு படித்தவுடன் வேலைவாய்ப்பு அளிக்கப் போவதைப் போல், மாணவர்களின் உடல் நலனில் அக்கறை காட்டாமல் பொதுத் தேர்வை நடத்தியே தீருவேன் என்று கூறுவது ஏற்புடையதல்ல. பொதுத் தேர்வை ஒரு பொருட்டாக கருதாமல், மாணவர் நலனில் அக்கறை காட்டி பொதுத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
தேர்வறைகளில் பல மணிநேரம் மாணவர்களையும், ஆசிரியர்களையும் வைத்து மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கி விட வேண்டாம். அதன் மூலம் கரோனா நோய் தொற்றின் சமூகப் பரவலுக்கு தமிழக அரசே காரணமாக இருந்து விட வேண்டாம்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.