Last Updated : 11 May, 2020 12:32 PM

 

Published : 11 May 2020 12:32 PM
Last Updated : 11 May 2020 12:32 PM

கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு வயது 65 ஆக அதிகரிக்கப்படுமா?- தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் எதிர்பார்ப்பு

கோவை

பல்கலைக்கழக மானியக்குழு நெறிமுறைகளின்படி, கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 113 அரசு கலைக் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையே ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக அதிகரித்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) நெறிமுறைகளின் படி, அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆக அதிகரிக்கப்படுமா என்னும் தங்களுடைய நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்று இக்கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி கூறியதாவது:
“இன்றைய சூழலில் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்குக் குறைந்தபட்சம் 35 வயது முதல் 40 வயது வரையுள்ளவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 40, 50 வயதுக்கு மேல் அரசுப் பணிகளுக்குத் தேர்வாகும் அரசு ஊழியர்களில், மற்றெந்தத் துறைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கல்லூரி ஆசிரியர்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.

கல்லூரி ஆசிரியர்களுக்கான தேர்வு நீண்டகால இடைவெளியில் நடைபெறுவதால், இப்பணிக்குப் பல்லாயிரக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். இவர்களில் பலர் தனியார் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக ஆசிரியர்களாகப் பணியாற்றி வருபவர்கள்.

அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியைப் பெறுவதற்கு கல்வித் தகுதி, கற்பித்தல் அனுபவம் போன்றவற்றிற்குத் தங்கள் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட வேண்டியுள்ளது. உதாரணமாக 22 வயதில் முதுநிலைப் பட்டப்படிப்பு முடிக்கும் ஒரு நபர், 24 வயதில் எம்.ஃபில். பட்டமும், 30 வயதில் பி.எச்.டி. பட்டமும் பெறுகின்றனர். இதற்கிடையில் நெட், ஸ்லெட் போன்ற தேசிய, மாநிலத் தகுதித் தேர்வுகளையும் எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்பின்னர் குறைந்தபட்சம் 7.5 ஆண்டுகள் தனியார் கல்லூரிகளில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிய பிறகே, அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுகின்றனர். அதன்பின்னர் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்து குறைந்தது 20 ஆண்டுகள் பணியாற்றி முடிப்பதற்குள்ளாகவே 58 வயதில் ஓய்வு பெற்று விடுகின்றனர்.

அரசுக் கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் த.வீரமணி

மற்ற அரசுத் துறைகளில் ஒரு நபர் 20 வயது முதல் 35 வயதுக்குள் அரசுப் பணிக்கு வந்து விட முடியும். இவர்களால் 20 முதல் 40 ஆண்டுகள் வரை அரசு ஊழியராகப் பணிபுரிய முடியும் என்பதை இந்நேரத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் யுஜிசி கல்லூரி ஆசிரியர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக நிர்ணயித்துள்ளது. இதன்படி கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 6 மாநிலங்களில் 65 ஆகவும், 10 மாநிலங்களில் 62 ஆகவும், 11 மாநிலங்களில் 60 ஆகவும் உள்ள நிலையில் தமிழகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டுமே 58 வயதாக உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அண்மையில் கல்லூரி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக அதிகரித்துள்ளதை இக்கழகம் வரவேற்கிறது. எங்களுடைய நீண்டகால வலியுறுத்தலை அரசு நிறைவேற்றியுள்ள போதிலும், பல்கலைக்கழக மானியக்குழுவின் நெறிமுறைகளின் படி தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், குறைந்தபட்சம் மாநில பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வு பெறும் 60 வயதை, அரசுக் கல்லூரி ஆசிரியர்களுக்கும் அதிகரித்து ஆணையிட வேண்டும் என்றும் இக்கழகம் தமிழக அரசை வலியுறுத்துகிறது”.

இவ்வாறு த.வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x