கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?- மத்திய அமைச்சர் பொக்ரியால் பதில்

கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?- மத்திய அமைச்சர் பொக்ரியால் பதில்

Published on

ஊரடங்கை முன்னிட்டு மூடப்பட்டுள்ள கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளை மத்திய, மாநில அரசுகள் அறிமுகப்படுத்தின. அதில் சிக்கல்கள், பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்தது. வீட்டிலேயே இருப்பதால் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஏப். 27 அன்று ட்விட்டரில் கலந்துரையாடினார். பொதுத் தேர்வுகள், ஆன்லைன் வகுப்புகள், உளவியல் பிரச்சினைகள் உள்ளிட்ட மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து இதில் பேசப்பட்டன.

இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று மாணவர்களுடன் ட்விட்டரில் அமைச்சர் பொக்ரியால் கலந்துரையாடினார். மதியம் 12 மணிக்குத் தொடங்கிய வெப்பினாரில், மாணவர்கள் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேகுடன் முன்வைத்தனர். அவற்றுக்குப் பதிலளித்த அமைச்சர், ''பல்கலைக்கழக மானியக் குழு ஜூலை 1-ம் தேதி தேர்வை நடத்தப் பரிந்துரைத்துள்ளது.

இதனையடுத்து ஜூலை முதல் வாரத்தில் கல்லூரித் தேர்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஜூலை இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட முயற்சிப்போம். அதன் மூலம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அடுத்த ஆண்டுக்கான வகுப்புகளைத் தொடங்கலாம்.

தங்கள் பகுதிகளின் சூழல் குறித்து அனைத்துக் கல்வி நிறுவனங்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளோம். ஜூலை மாதத்திலும் அந்தப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தால், முந்தைய தேர்வுகள் மற்றும் இன்டர்னல் தேர்வுகளின் மதிப்பெண்கள் மூலம் மாணவர்களை அடுத்த வகுப்புக்குத் தரம் உயர்த்தலாம்'' என்று அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in