தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் ஊதியம் உண்டா?- ஆய்வுக்கு உத்தரவு
தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பல தனியார் பள்ளிகள் ஊரடங்கைக் காரணம் காட்டி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை என்று புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதேபோல சில இடங்களில் பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் ஆசிரியர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில், ''தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தனியார் மழலையர் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து தகவல்களைப் பெற்று அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
