Published : 02 May 2020 01:42 PM
Last Updated : 02 May 2020 01:42 PM

விளிம்பு நிலை மக்களுக்காக சமுதாய சமையலறை மூலம் உணவு: அசத்தும் ஆசிரியர் மணிமாறன்

விளிம்புநிலை மக்கள் அதிகம் வாழும் ஒவ்வொரு பகுதியிலும் சமுதாய சமையலறை என்னும் முன்னெடுப்பை ஆரம்பித்து அவர்களின் பசியாற்றி வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் மணிமாறன்.

திருவாரூர் கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் நபர்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு தினமும் ஒருவேளை உணவினை உறுதி செய்தல் என்ற திட்டத்துடன் உணவு வழங்கலைச் செயல்படுத்தி வருகிறார்.

இதில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட திருவாரூரைச் சுற்றியுள்ள 13 குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், வெளிமாநிலத் தொழிலாளர்கள், வெளிமாவட்டத் தொழிலாளர்கள் எனப் புலம்பெயர் தொழிலாளர்களும் பயன்பெறுகின்றனர். நரிக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உள்ளிட்டோரும் இதில் அடக்கம்.

இதுகுறித்துப் பேசுபவர், ''தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கரோனோ காலத்தில் உணவளிக்க நாங்களே உணவுப்படை என்னும் குழுவை அமைத்துள்ளோம். இதன் சார்பில் கடந்த 15 நாட்களாக உணவு வழங்கி வருகிறோம். 5000க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை ரூ.1.5 லட்சம் மதிப்பில் சுமார் 2500 பேருக்கு வழங்கியுள்ளோம். இதற்கிடையில் சிறிய அளவில் 200 குடும்பங்களுக்கு மளிகை, காய்கறிகள், அரிசி, பிரெட் பாக்கெட் தொகுப்பாக ரூ.30,000 மதிப்பில் வழங்கியுள்ளோம்'' என்றார் ஆசிரியர் மணிமாறன்.

மளிகைப் பொருட்களாகவோ, பணமாகவோ வழங்காமல் சமைத்த உணவை வழங்க என்ன காரணம் என்று கேட்டபோது, ''மக்கள் தினமும் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு வருகின்றனர், இங்குள்ள மக்கள் வழக்கமாக இரண்டு வேளை மட்டுமே உணவு உட்கொள்வர். தற்போது காசில்லாததால் ஒரு நேரமாகிவிட்டது. அதையாவது அவர்கள் சத்து மிகுந்ததாகச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில் சமுதாய சமையலறையை ஆரம்பித்தோம்.

குறிப்பிட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகிலேயே தினந்தோறும் சமைத்து உணவு வழங்குகிறோம். சிறுவர்களின் கைகளில் பிஸ்கட் பாக்கெட்டுகளையும் அளிக்கிறோம். இதுபோலத் தொடர்ந்து ஒரே பகுதிக்கு 3 நாட்களுக்குத் தலா ஒரு வேளை உணவளிக்கிறோம். நண்பர்கள் வழங்கும் மளிகைப் பொருட்களையும் சில வீடுகளுக்கு வழங்கி வருகிறோம். நாம் செய்வது சிறிய உதவிதான் என்றாலும், அதனை அவர்கள் மிகவும் பெரிதாக நினைக்கின்றனர்.

எனது பங்களிப்பு 39 ஆயிரம் ரூபாயை வழங்கி இருக்கிறேன். கிராமத்தில் மக்களுக்கு அரிசிதான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது. ரேஷனில் வழங்கிய அரிசியின் கையிருப்பு தீர்ந்து விட்டதால், மக்கள் அரிசி கேட்கின்றனர். இனி அதையும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். விளிம்பு நிலை மக்களின் பசியைப் போக்குவதில் ஒன்றிணைவோம்'' என்றார் ஆசிரியர் மணிமாறன்

ஆசிரியர் மணிமாறன்: 99525 41540

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x