Published : 26 Apr 2020 07:04 PM
Last Updated : 26 Apr 2020 07:04 PM

இந்தியக் கல்வியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல்: கரோனா காலப் பாடம்

உலக நாடுகள் முழுவதும் உள்ள கல்வி நிலையங்களுக்கு கரோனா வைரஸ் பூட்டுப் போட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்றாடம் முடக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகமே தொடர்புகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதால் நிர்வாகத்தினர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட கல்வி புலம் சார்ந்த அனைவரும் எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ளும் சூழலில் சிக்கியுள்ளனர். இந்தக் காலகட்டம் புதிய இயல்புநிலையை உருவாக்கி இருக்கிறது. இத்தகைய புதிய இயல்பு நிலைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வது எப்படி என்ற கேள்வியைத்தான் எல்லோரும் தற்போது எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கரோனா காலகட்டத்தையும் அது கல்வி மீது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தையும் அலசி ஆராய்வோம். இதற்கு ஸ்வாட் (SWOT)அலசல் எனப்படும் பிரபல ஆய்வு முறையைப் பொருத்திப் பார்க்கலாம். இதன் மூலம் இந்தியக் கல்வியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் ஆகியவற்றைக் கண்டறியலாம். அந்தப் பயிற்சியானது புதிய குறிக்கோள்களையும் இலக்குகளையும் நோக்கி நகர உதவும்.

பலம்
நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் கடந்த பல வாரங்களாக மூடப்பட்டு இருப்பதால் தங்களுடைய குழந்தைகளின் கல்வி குறித்த கவலையில் பெற்றோர் ஆழ்ந்துள்ளனர். சிலர் தங்களுடைய குழந்தைகளை ஆன்லைன் படிப்புகளைப் படிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், மாணவர்களுக்கு அதில் நாட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. சில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் பாடங்களைத் தயாரிக்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான ஆசிரியர்களுக்கு அதற்கேற்ற பாடங்களை உருவாக்கும் அனுபவம் இல்லை. இதேபோல சில பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் இணைய வகுப்புகள் வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்த முயல்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறுகின்றன.

இவற்றை எல்லாம் வைத்து சோர்வடையத் தேவையில்லை. ஏனென்றால் இத்தகைய இக்கட்டான சூழ்நிலையானது கல்வியின் நோக்கத்தை சிந்தித்துப் பயனுள்ள பொருத்தமான கேள்விகளை எழுப்ப ஆசிரியர்களையும் பெற்றோரையும் மாணவர்களையும் முதன்முறையாகத் தூண்டி இருக்கிறது. சில விஷயங்களை விமர்சனப் பார்வையுடன் அவர்கள் உற்றுநோக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கல்விக்கான வேறு விளக்கம் எதிர்காலத்தில் கண்டறியப்படுமா? வித்தியாசமான கற்றல் முறை தேவைப்படுகிறதா? இந்த மாற்றம் மாணவர்கள் மீதும் கற்றல் முறை மீதும் நேர்மறையான தாக்கம் அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமா? மாணவர்களின் அறிவும் திறனும் எப்படி மதிப்பீடு செய்யப்பட வேண்டும்? லட்சக்கணக்கான இந்திய மாணவர்களிடம் கணினியோ இணைய வசதியோ இல்லாதபோது ஆன்லைன் கல்வித் திட்டம் இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவது சாத்தியமா? விட்டில் இருந்து கற்கும் முறையின் முக்கியத்துவம் என்ன? மாணவர்களின் சுயசார்பு நிலை எவ்வளவு முக்கியம்? ஆசிரியர்களைச் சார்ந்து இருப்பதும் பாரம்பரியக் கற்றல் முறையும் நல்லதா? இதுபோன்ற பல கேள்விகள் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

இந்தப் பெருவெடிப்பு நோய்க் காலமானது நமது கல்வி அமைப்பில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சகஜ நிலை திரும்பியதும் பழைய நிலைக்கே சென்று விடாமல் நேர்மறையான மாற்றங்கள் நிகழ வேண்டும்.

பலவீனம்

படைப்பாற்றல் இன்மை, உள்கட்டமைப்பு வசதிகளில் போதாமை, முறையான பயிற்சியற்ற ஆசிரியர்கள், சமமற்ற வசதி வாய்ப்பு, தேர்வை மையப்படுத்திய மதிப்பீட்டு முறை, மாணவர்களுக்குத் தற்சார்பின்மை ஆகியவை நம்முடைய கல்வி அமைப்பின் பலவீனங்கள். தற்போதைய ஊரடங்கு காலகட்டத்தில் இத்தகைய பலவீனங்கள் எத்தகைய தடைக்கற்களாக மாறியுள்ளன என்பதை யோசிப்போமா?

தொலைநிலைக் கல்வி, வீட்டுக் கல்வி முறை, ஆன்லைன் கற்றல், டிஜிட்டல் கல்வி ஆகிய வார்த்தைகள் இன்று பரபரப்பாக உலாவுகின்றன. டெல்லி அரசு கூட பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துப்படும் என்று அண்மையில் அறிவித்தது. ஆனால், அதற்குரிய வசதிகள் பெருவாரியான மாணவர்களிடம் இல்லாத காரணத்தினால் இது சாத்தியப்படாது என்று ஆசிரியர்கள் தெரிவித்துவிட்டனர். ஆகையால், இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் மின்- கற்றல் முறை சாத்தியமா? இந்தியாவில் ஆன்லைன் கல்வித் திட்டம் பணக்காரர்களுக்கு மட்டுமானதா? இத்தகைய டிஜிட்டல் பிளவு கல்வியில் மேலும் ஏற்றத்தாழ்வுக்கு இட்டுச்செல்லுமா? உள்ளிட்ட கேள்விகள் சவாலாக முளைத்திருக்கின்றன.

தங்களுடைய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதன் மூலம் ஊரடங்கு நாட்களைப் பயனுள்ளதாக மாற்றி இருப்பதாக வசதி படைத்தவர்களுக்கான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் முழங்குகிறார்கள். ஆனால், புறநகர், கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதை செய்ய முடியுமா? அங்கு ஆசிரியர், மாணவர் இரு தரப்பினருக்குமே கணினி மற்றும் இணைய வசதி கிடைக்கப்பெறவில்லையே. 'கூகுள் கிளாஸ்ரூம்' போன்ற ஆன்லைன் அம்சங்கள் இருப்பதோ அவற்றைப் பயன்படுத்தும் முறையோ அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லையே. இந்நிலையில் இருக்கும் ஆசிரியர்களால் ஆன்லைன் வகுப்புகள் குறித்து யோசிக்க முடியுமா என்ன?

நெருக்கடியான சூழலை படைப்பாற்றலோடு சமாளிக்க நம்முடைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நம்முடைய கல்வி அமைப்பு பயிற்சி அளிக்கவில்லையே. மின் - கற்றல் முறையின் முக்கியத்துவம் உணர்த்தப்படாததால் அவர்களால் நிஜ வகுப்பறையில் இருந்து மெய் நிகர் வகுப்பறைக்கு இடம்பெயர முடியவில்லையே!



வாய்ப்பு

எல்லா அமைப்புகளுக்கும் பலம், பலவீனம் இருக்கவே செய்யும். வாய்ப்பு கை நழுவிப் போகாதபடி பலத்தை அதிகரித்து பலவீனத்தைக் குறைத்துக் கொள்வதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இந்நிலையில் நம் கண்முன்னே இருக்கும் வாய்ப்புகள் மூன்று. முதலாவது, டிஜிட்டல் யுகத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர். இரண்டாவது, கொட்டிக்கிடக்கும் இணைய வளம். மூன்றாவது, உத்வேகமான ஆசிரியர்கள்.

இதில் டிஜிட்டல் யுகத் தலைமுறையினர் பிறந்தது முதலே கணினி, இணையம், மல்டிமீடியா வசதிகளைக் கண்டவர்கள். யூடியூபில் காணொலி காண்பதும், சமூக ஊடகங்கள் வழியாக மக்களோடு தொடர்புகொள்ள விரும்புவதும், தொழில்நுட்ப மொழியில் உரையாடுவதும் சகஜமாக இருப்பதால் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையும் வித்தியாசமாக இருக்க வேண்டியுள்ளது. ஆகையால், மின்- கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தி கற்பவரின் சுயசார்பு நிலையை மேம்படுத்த வேண்டிய நேரம் இது.

இந்நிலையில் படைப்பாற்றலுடன் மிளிர ஆசிரியர்களை கரோனா ஊரடங்கு காலம் உந்தித்தள்ளி இருக்கிறது. அவர்களால் யூடியூப் காணொலிகள், பிபிடி தயாரிப்புகள் செய்து தங்களுடைய மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. சில ஆசிரியர்கள் 'ஜூம்', 'ப்ளூஜீன்ஸ்', 'கூகுள் மீட்' உள்ளிட்ட இணைய்காணொலி வகுப்பு முறைக்குப் பழக்கப்பட ஆரம்பித்துள்ளனர்.

அச்சுறுத்தல்

டிஜிட்டல் கல்வி முறை வேகம் எடுத்திருக்கும் சில வளர்ந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின் தங்கியே இருக்கிறது. குறிப்பாக ‘மூக்’ எனப்படும் மேசிவ் ஓப்பன் ஆன்லைன் வகுப்பு முறை முலம் மாணவர்கள், ஆசிரியர்கள், துறை வல்லுநர்கள் தங்களுடைய திறன்களை மெருகேற்றும் வசதிகள் மின்-கற்றல் முறை பிரபலமாக உள்ள நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. இத்தகைய மின்-கற்றல் முறை மூலம் ஆசிரியர்களைச் சார்ந்திருக்காமல் மாணவர்கள் சுயமாகக் கல்வி கற்கும் வழி ஊக்குவிக்கப்படுகிறது. இப்படி இருக்க வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் ஆன்லைன் கல்வியின் வளர்ச்சிப் போக்கை அச்சுறுத்தலாகப் பாவிக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறது.

மொத்தத்தில் கல்வி தொடர வேண்டும். மாணவர்கள் கற்க வேண்டும். ஊரடங்கு காலகட்டம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். படைப்பாற்றலோடு சிந்தித்துப் புதுமையான கற்றல் முறைகளைக் கல்வியாளர்கள் அறிமுகப்படுத்த வேண்டும். இணையமும் அதிவேக இணைப்பு வசதியும் சிக்கலாக இருந்துவரும் நாட்டில் டிஜிட்டல் பிளவை எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சவாலாகும். இத்தகைய ஏற்றத்தாழ்வை குறைத்து டிஜிட்டல் கற்பித்தல் முறையைப் பரவலாக்கும் பணியை கல்வித்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

ஆல்பர்ட் ராயன், தமிழில்: ம.சுசித்ரா
நன்றி: தி இந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x