Last Updated : 23 Apr, 2020 02:57 PM

 

Published : 23 Apr 2020 02:57 PM
Last Updated : 23 Apr 2020 02:57 PM

தாலுகாவுக்கு ஒரு விடைத்தாள் திருத்தும் மையம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் மனு

திருநெல்வேலி

தமிழகத்தில் தாலுகாதோறும் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அதன் மாநிலப் பொதுச் செயலாளர் ப.மனோகரன் தேர்வுத் துறை இயக்குநருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஊரடங்கு முடிவுறும் மே 3-ம் தேதிக்குப்பின் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வும், அதைத் தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க இருப்பதாக கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தும் மையங்களை சமூக இடைவெளியைப் பின்பற்றி அமைக்க வேண்டும். ஒரு தலைமைத் தேர்வர் , மதிப்பெண் கூட்டுநர், 6 உதவித் தேர்வர் என அமைக்கப்படும் ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி அறைகள் வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கை வசதி (தனித்தனி சேர், டேபிள்) வேண்டும்.

சமூக இடைவெளியுடன் தேர்வு மையம் அமைக்கும்போது, கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட அதே தேர்வு மைய எண்ணிக்கை போதாது. எனவே தேர்வு மைய எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும். கடந்த ஆண்டுகளில் மாவட்டத்திற்கு இரண்டு, கல்வி மாவட்டத்திற்கு ஒன்று என இருந்த தேர்வு மையங்களை விரிவுபடுத்தி, ஆசிரியர்களின் நலன்கருதி தாலுகாவிற்கு ஒரு தேர்வு மையம் என்று அமைக்க வேண்டும். ஆசிரியர்களின் இருப்பிடத்தைக் கணக்கில் கொண்டு அருகாமை மையத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். வேறு மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட மையங்களில் பணியாற்ற சிறப்பு அனுமதி வழங்க வேண்டும்.

முகாம் அலுவலர் பணிக்கு போதாமை ஏற்படின் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை விருப்பத்தின் பெயரில் முகாம் அலுவலராக நியமித்தல் வேண்டும். மையங்களுக்குக் கண்டிப்பாக உணவு ஏற்பாடு செய்து எடுத்து வரவேண்டும் வெளியே சென்று உணவு உண்ண முடியா நிலை உள்ளது. பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் மிகுதியாக உள்ளது. எனவே விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் நேரம் காலை 8, 8.30 என்ற வழக்கமான நேரத்தை மாற்றி 9.30 க்கு தொடங்கி, மாலை 4 மணிக்கு முடிக்க வேண்டும்.

கரோனோ அபாயம் கருதியும், சமூக இடைவெளியைக் கணக்கில் கொண்டும் விடைத்தாள் திருத்தும் மையம் வந்து செல்ல தேர்வுத்துறையே போக்குவரத்து வசதியை காலை, மாலை ஏற்பாடு செய்ய வேண்டும். மொழிப் பாடத்திற்கு 12 என்றும், மற்ற பாடத்திற்கு 10 என்றும் இருக்கும் விடைத்தாள் எண்ணிக்கையை மாற்றக் கூடாது. கூடுதல் விடைத்தாள் திருத்தும்படி நிர்பந்திக்க கூடாது.

ஆசிரியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை தினமும் செய்து தர வேண்டும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவக் குழு அமைத்து அனைத்துப் பணியாளர்களையும் தினந்தோறும் கரோனா பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு வழங்க வேண்டிய செலவினத் தொகையை நிலுவையில் உள்ளதோடு சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்வு வழங்க வேண்டும் என்ற அரசு விதிகள் இருக்க, கடந்த பல ஆண்டுகளாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படவில்லை. அதனைக்கணக்கில் கொண்டு உழைப்பூதியம் உள்ளிட்ட அனைத்தையும் இரட்டிப்பாக்கித் தருதல் வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x