Last Updated : 23 Apr, 2020 12:51 PM

 

Published : 23 Apr 2020 12:51 PM
Last Updated : 23 Apr 2020 12:51 PM

ஊரடங்கால் முடங்கிய பயிற்சி; விளையாட்டுத் திறனில் பின்னடைவைச் சந்திக்கும் வீரர்கள்? 

கோவை

ஊரடங்கால் தொடர் பயிற்சி முடங்கியுள்ளதால், விளையாட்டுத் திறனில் வீரர், வீராங்கனைகள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

'உடற்தகுதி' வீரர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. இதை தொடர்ச்சியாக பராமரித்தால் மட்டுமே, பங்கேற்கும் போட்டிகளிலும் சாதிக்க முடியும்.

கவலையில் வீரர்கள்

ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இதுபோன்ற அசாதாரண சூழ்நிலை விளையாட்டு வீரர்களின் திறனைப் பின்னோக்கி இழுத்து, விளையாட்டுத் துறைக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனலாம். “இதுபோன்ற சூழலில் மைதானங்களில் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ள விளையாட்டுகளில் ஈடுபட்டு வரும் வீரர்கள் தங்கள் விளையாட்டுத்திறனும், உடற்திறனும் பாதிக்காமல் தற்காத்துக் கொள்வதில் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வருங்காலங்களில் விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்க நேரிடும்” என்று வேதனை தெரிவிக்கின்றனர், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதித்து வரும் கோவையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள்.

இப்பிரச்சினையில் இருந்து இன்று விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, நாளை விளையாட்டுத் துறை பின்னுக்குத் தள்ளப்படாமல் தடுப்பது குறித்த ஆலோசனைகளைப் பெற விளையாட்டுத்துறை வல்லுநர்களிடம் பேசினோம்.

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி

இந்திய கைப்பந்து அணி பயிற்சியாளருமான கோவையைச் சேர்ந்தவருமான ஜி.இ.ஸ்ரீதரன்:

“ஊடரங்கால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை உலக நாடுகளில் உள்ள அனைத்து வீரர்களும் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய பயிற்சியையும், முயற்சியையும் கைவிடக்கூடாது.
தினசரி காலையோ அல்லது மாலையோ 45 நிமிடங்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்து, தங்களுடைய உடற்தகுதியைப் பராமரிக்க வேண்டும். முதல் 10 நிமிடங்கள் வார்ம் அப் செய்வதற்காக மெதுவாக ஓடி, உடலை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்த 15 நிமிடங்கள் தோள்பட்டை, இடுப்பு, கால் போன்ற பகுதிகளை சுழற்றி பயிற்சி செய்ய வேண்டும். அதன்பிறகு உடலுக்கு வலு சேர்க்கும் மற்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், மனமும் ஒருமுகப்படும். வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளில் எழும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். சோம்பல் ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். இதை வீரர்கள் மட்டுமின்றி அனைவரும் செய்யலாம்.

ஊடரங்கு உத்தரவால் உடல் உழைப்பின்றிப் பொழுதைப் போக்கிவிட்டு, நாளை ஊரடங்கு தளர்த்தப்படும் போது, நம்முடைய வழக்கமான வாழ்க்கைச் சூழலுக்குள் நுழையும் உடலும், மனமும் ஒத்துழைக்காது. இதனால் நம்முடைய வாழ்க்கைச் சூழலையும் பாதிக்கும். எனவே வீரர்கள் உடலையும், மனதையும் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.

தடகளத்தில் வேகத்திறன்

இந்திய முன்னாள் தடகள வீரரும், தடகளப் பயிற்சியாளருமான டி.நந்தகுமார்:

“ஓட்டப் பந்தயம், தடைதாண்டி ஓடுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், குண்டுச் சங்கிலி எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் பல்வேறு உட்பிரிவுகளை உள்ளடக்கியது தடகளம். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் தடகள வீரர்கள், இதுபோன்ற சூழலில் பயிற்சியின்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பது, அவர்களுடைய உடற்திறன், விளையாட்டுத்திறன் ஆகிய இரண்டையுமே பாதிக்கும். தடகள வீரர்களுக்கான அடிப்படைத் தகுதியான 'வேகம்' குறைந்து விடும். இது நாளை அவர்களுடைய வெற்றியை வெகுவாகப் பாதிக்கும்.

100 மீ. முதல் 400 மீ. வரை ஓடும் ஸ்பிரின்ட்டர்களுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படாது என்ற போதிலும், 800 மீ., 1500 மீ. ஓடும் நடுந்தொலைவு (Middle Distance) வீரர்களும், நெடுந்தொலைவு (Long Distance) 5000 மீ., 10000 மீ., கிராஸ் கண்ட்ரி ரேஸ், மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்.

இச்சூழலில் உடற்பயிற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டால் மட்டுமே, நாளை மைதானத்தில் பயிற்சி செய்து, தங்களுடைய வேகத்திறனை மீட்டெடுக்க முடியும். அதற்கு வீரர்களின் தன்மைக்கேற்ப 2-3 மாதங்கள் ஆகலாம். பயிற்சியின்றி முடங்கி விட்டால் தங்களுடைய விளையாட்டுத்திறனை நாளை மீட்டெடுப்பது என்பது கேள்விக்குறியாகிவிடும். Stretching, Skipping, On spot running, Arm action, Wall pushing போன்ற பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.

குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டுச் சங்கிலி எறிதல் வீரர்கள் பந்துகளை எறிந்து (Medicine Ball) தங்களுடைய எறியும் திறன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடற்தகுதி மிகவும் அவசியம் என்பதால் ஊட்டச்சத்து உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

பேட்டிங், பவுலிங் பயிற்சி
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க துணைத் தலைவரும், தலைமைப் பயிற்சியாளருமான ஏ.ஜி.குருசாமி:

கோவை மாவட்டத்தில் மாவட்ட, மாநில, தேசிய கிரிக்கெட் அணிகளில் விளையாடும் வீரர்கள் பலர் உள்ளனர். ரஞ்சிக்கோப்பை, தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் கிரிக்கெட் விளையாடும் திறன் பாதிக்கப்படாத வகையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடும் வீரர்களைத் தரம் பிரித்து, அவர்கள் தங்கள் வீடுகளிலேயே விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்வதற்கான அட்டவணை தயாரித்து கொடுத்துள்ளேன்.

வழக்கமான உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு, பேட்ஸ்மேன்கள் பந்துகளைக் கட்டித் தொங்கவிட்டு, அதை தட்டித் தட்டி 'ஷாட்ஸ்' அடித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ள இட வசதி தேவை. இடவசதி இல்லாதவர்கள் ஓடிவந்து பந்து வீசுவதைப் போல 'ஆக்ஷன்' பயிற்சி செய்ய வேண்டும். இதேபோல் பந்துகளை பிடித்து அங்கும், இங்கும் ஓடி 'ஃபீல்டிங்' பயிற்சியும் செய்யலாம். அவ்வப்போது வாட்ஸ்-அப் குழுவில் வீரர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்” என்றார்.

கூடைப்பந்தில் தொடுணர்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கூடைப்பந்து பயிற்சியாளர் எம்.ரகுகுமார்:

“அனைத்து வீரர்களும் எதிர்பாராத இச்சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் கூடைப்பந்து வீரர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களுடைய திறமைகளையும், விளையாட்டு நுணுக்கங்களையம் வளர்த்துக் கொள்ள முடியும்.

கூடைப்பந்து ஆட்டத்தில் பந்துகளை தரையில் தட்டிக் கொண்டு நகர்வது மிகவும் முக்கியமானது. நமக்கு
முன்னால் தட்டுவது, கால்களுக்கு இடையில் கடத்தி தட்டுவது, பின்னால் தள்ளி தட்டுவது முக்கியமானவை. கூடைப்பந்தை தொடர்ச்சியாக தட்டிக் கொண்டே இருந்தால்தான், வீரர்களின் கைகளில் பந்தைத் தட்டிக் கொண்டே இருப்பது போன்ற உணர்வை எப்போதுமே உணர முடியும். வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது கையிலும், இடது கையிலும் பந்தை தட்ட வராது. இதுபோன்ற காலத்தில் வீரர்கள் மாற்று கையால் பந்தைத் தட்டிப் பழகலாம். இது போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலையில் வெற்றியைப் பெற உதவும். பின்னர் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 'Skipping' செய்வது ஒட்டுமொத்த உடலுக்கும் பயிற்சி அளிக்கக்கூடியது. இதேபோல் நின்ற இடத்திலும், அங்கும் இங்கும் நகர்ந்தும் 'Streching' செய்யலாம். கூடைப்பந்து எப்போதும் கைகளிலேயே சுழல வேண்டும்” என்றார்.

இதுபோன்ற பல்துறை விளையாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளையும், அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையும் பின்பற்றி வீரர்கள் தங்கள் விளையாட்டுத் திறனுக்கும், உடற்தகுதியையும் மெருகேற்றிக் கொள்வது நலம் பயக்கும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: த.சத்தியசீலன்- sathiyaseelan.t@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x