Last Updated : 23 Apr, 2020 12:15 PM

 

Published : 23 Apr 2020 12:15 PM
Last Updated : 23 Apr 2020 12:15 PM

கரோனா: வெளிநாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களின் கல்வி என்னவாகும்?

சிறப்பான உயர்கல்வி பெற்று கை நிறைய சம்பளம் வாங்கி வாழ்க்கையைத் தொடங்கும் கனவில் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சீனா, ஐக்கிய அரேபிய அமீரகம் ஆகிய நாடுகளில் மட்டுமே 7 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பவர்களாக இந்திய மாணவர்களே இருக்கிறார்கள்.

இதற்கிடையில் கரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் போது மாணவர்களையும் அது பாதிக்கவே செய்கிறது. அதிலும் வெளிநாடுகளில் படித்து வரும் இந்திய மாணவர்களின் நிலை என்ன? கரோனா நோய்த் தொற்று பரவலால் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மீண்டும் இந்தியாவுக்குப் பத்திரமாக அழைத்து வரும் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்டன. சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நோய்த் தொற்றுப் பரவலும் அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதை அடுத்து சிலர் நாடு திரும்பினர். ஆனால், பலர் அந்தந்த நாடுகளிலேயே முடங்கிவிட்டனர்.

அப்படி வெளிநாடுகளில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும் தமிழக மாணவர்கள் கரோனா காலத்தில் எத்தகைய சூழலில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள சிலரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

தமிழ்ச் சங்கத்தால் கிடைத்த பாதுகாப்பு

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்தில் இதுவரை கிட்டத்தட்ட1 லட்சத்து 30 ஆயிரம் மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிலும் ஐக்கிய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில்தான் அதிகப்படியான கரோனா நோய்த் தாக்கம் இதுவரை பதிவாகி உள்ளது.

மதுரையை சேர்ந்த ஸ்ருதி 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள யூனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் லண்டனில் படித்துவரும் அவரை வாட்ஸ் அப் எண்ணில் அழைத்துப் பேசினோம். "முதுநிலை பயோமெடிக்கல் சயின்ஸ் பட்டப்படிப்பில் இந்த ஆண்டு ஜனவரியில்தான் சேர்ந்தேன். அதுவும் ஓராண்டு படிப்புதான். இந்நிலையில் கரோனா அச்சத்தால் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே பல்கலைக்கழகத்தை மூடிவிட்டார்கள். என்னுடைய வகுப்பில் மட்டுமே 20 இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களில் யாராலும் சொந்த ஊர் திரும்ப முடியவில்லை. சிக்கலான நிலையில்தான் சமாளித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் ஜூலை இறுதியில்தான் வளாகத்துக்குள் அடியெடுத்து வைக்க முடியும்.

பல்கலை. மூடப்பட்டிருப்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், உயிரி மருத்துவமானது சோதனைக் கூடத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் படிப்பாகும். இப்படி இருக்க பாதி வருடப் படிப்பை ஆன்லைனிலேயே படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். லண்டன் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு மூலம் இங்கு வாழும் தமிழ்க் குடும்பத்தினரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறேன். அதனால் பாதுகாப்பாக உணர்கிறேன்" என்றார் ஸ்ருதி.

ஆசைப்பட்ட பணிவாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமா?

சீனாவின் ஒரு பகுதியான ஹாங்காங்கில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த ஜனவரி 23-ம் தேதி கண்டறியப்பட்டார். அதன் பிறகு அங்கு உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு பிப்ரவரி மாதம் தொடங்கி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு உள்ள சிட்டி யூனிவர்சிட்டி ஆஃப் ஹாங்காங்கில் நான்காம் ஆண்டு கட்டுமானப் பொறியியல் பட்டப் படிப்பு படித்து வருகிறார் மாணவி ஹர்ஷிணி. குடும்ப விழாவில் கலந்து கொள்ள, கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வந்த அவர் மீண்டும் ஹாங்காங் செல்ல முடியாமல் தற்போது சென்னையில்தான் இருக்கிறார்.

அவரை அழைத்துப் பேசியபோது, "பொறியியல் படித்தால் இந்தியாவில் எதிர்காலம் இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. ஆனால், ஹாங்காங்கில் சிவில் இன்ஜினீயரிங் படித்தால் உடனடி வேலை கிடைக்கும். கட்டுமானத் தொழில்நுட்பத்தில் அவர்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறார்கள். பல புதிய திட்டங்கள் வருடம் முழுவதும் முன்னெடுக்கப்படுகின்றன.

சீனாவின் ஒரு பிரதேசமானாலும் ஹாங்காங் நவீனமயமான நாடு. இங்கு கான்ட்டனீஸ் மொழி தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. ஆகவேதான் ஆவலோடு ஹாங்காங் சென்று பட்டப் படிப்பை படிக்க ஆரம்பித்தேன். வரும் மே மாதத்துடன் என்னுடைய படிப்பு முடியவிருக்கிறது.

இந்நிலையில் கரோனா நோய்த் தொற்று அச்சத்தால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் ஓரளவு சமாளிக்கிறோம். 21 வயதாகும் நான் இதுவரை கரோனா போன்ற உலகத்தையே ஆட்டிப்படைக்கும் அச்சுறுத்தலைக் கண்டதில்லை. ஆகையால் என்ன செய்வதென்று புரியாமல் பதற்றமாக இருக்கிறது. மீண்டும் ஹாங்காங் சென்று படிப்பை முடித்து ஆசைப்பட்ட பணிவாழ்க்கையை ஆரம்பிக்க முடியுமா என்பது போன்ற ஏகப்பட்ட கேள்விகள் மனத்தைத் துளைத்துக்கின்றன" என்றார் ஹர்ஷிணி.

விடுதியிலேயே அடைந்து கிடக்கிறோம்!

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் இதுவரை 58 ஆயிரம் பேர் ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மாஸ்கோ ஏவியேஷன் பல்கலைக்கழகத்தில் எம்.டெக். ஏரோஸ்பேஸ் முதுநிலைப் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் கபிலன் குமரகுரு. கரோனா ஊரடங்கு உத்தரவு காலத்தில் மாஸ்கோவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருக்கும் அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம். "என்னுடைய அப்பா பள்ளி ஆசிரியர். நான் இளநிலை ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு இன்போசிஸ் நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப வேலையில்தான் முதலில் சேர்ந்தேன்.

பிறகு ஒரு நாள் அப்பா பள்ளிக்கூடத்துக்குச் சிறப்பு விருந்தினராக வந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி வி. ஞானகாந்தி உரை நிகழ்த்தினார். அவர் குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல் கலாமுடன் இணைந்து பணிபுரிந்தவர். அவர் உரையைக் கேட்கும் வாய்ப்பு அன்று கிடைத்தது. அதன் பிறகுதான் விமானத் துறையில் மேற்படிப்பு மேற்கொள்ளும் உத்வேகம் பெற்றேன். நிச்சயமாக இங்கு மிகச் சிறந்த கல்வியும் பெற்று வருகிறேன். நானும் படிப்பில் முதலிடத்தில் இருக்கிறேன். கரோனா தடுப்பு நடவடிக்கையால் இறுதி தேர்வு ஜூன் மாதத்திலா அல்லது ஜூலை மாதத்திலா என்று தெரியாமல் விடுதியிலேயே அடைந்து கிடக்கிறோம்" என்றார் கபிலன் குமரகுரு.

இவர்களை போல உலக நாடுகள் பலவற்றில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தோடு இருந்து கொண்டிருக்கிறார்கள். கரோனா என்ற கொடிய நோய் அப்புறப்படுத்தப்பட்டால் மட்டுமே இவர்களுடைய கல்வி இலக்கு முழுமை பெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x