Last Updated : 21 Apr, 2020 12:29 PM

 

Published : 21 Apr 2020 12:29 PM
Last Updated : 21 Apr 2020 12:29 PM

இப்படியும் ஓர் ஆசான்: தினந்தோறும் மரத்தில் ஏறி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!

கரோனா ஊரடங்கில், தினந்தோறும் மரத்தில் ஏறி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கொல்கத்தாவில் அடமஸ் பல்கலைக்கழகம் மற்றும் ரைஸ் எஜுகேஷன் என்னும் இரண்டு கல்வி நிறுவனங்களில் வரலாறு பாடம் எடுத்து வரும் பேராசிரியர் சுப்ரதா பதி. 35 வயதான இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பங்குரா மாவட்டத்தின் அஹாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர். கரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கொல்கத்தாவில் இருந்து சொந்த ஊர் திரும்பினார்.

தனது மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பெடுக்க முடிவெடுத்தார். கையில் இருந்த செல்போனில் இணைய இணைப்பு கிடைக்கவில்லை. வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி, டவர் கிடைக்குமா என்று சோதித்தார், கிடைத்தது.

அந்த வேப்ப மரத்திலேயே உட்கார்வதற்கு வசதியாக மரத்தில் பலகைகள் செய்தார் சுப்ரதா. காலையிலேயே தண்ணீர், உணவோடு மேலே செல்பவர், 2 அல்லது 3 வகுப்புகளை ஒருசேர எடுக்கிறார். இதுகுறித்துப் பேசுபவர், ''கரோனா விடுமுறையால் வீட்டுக்கு வந்தாலும் ஆசிரியர் என்னும் பொறுப்பின் கடமையை என்னால் மறக்க முடியவில்லை. இணையம் கிடைக்காத சூழலில், மரத்தில் ஏறி வகுப்பெடுக்கிறேன்.

மதியமாகும் போது வெயில் வாட்டியெடுக்கும். சில நேரங்களில் இயற்கை உபாதையும் ஏற்படும். முக்கிய வகுப்பெடுக்கும்போது அதை சமாளித்துக்கொள்ள முயற்சிப்பேன்.

ஒருசில நாட்களில் காற்றும் மழையும் என்னுடைய மர இருப்பிடத்தைக் குலைத்துவிடும். அடுத்த நாள் சரிசெய்து கொள்வேன். எந்த சூழலிலும் எனது மாணவர்கள் சிரமப்படக் கூடாது என்று விரும்புகிறேன்.

அவர்களும் எனக்கு ஆதரவாக ஆர்வத்துடன் படிக்கின்றனர். எனது பாடத்தில் அவர்கள் நல்ல மதிப்பெண்களை வாங்க வேண்டும் என்பதே எனது ஆசை'' என்கிறார் பேராசிரியர் சுப்ரதா பதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x