Published : 14 Apr 2020 05:23 PM
Last Updated : 14 Apr 2020 05:23 PM

தென்னை ஓலையில் கைவினைப் பொருட்கள்: சூழல் காக்கும் ஆசிரியர்!

குழந்தைகளுக்குத் தென்னை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுத்து சூழலைக் காத்து வருகிறார் ஆசிரியர் சங்கர தேவி.

கரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப் போட்டிருக்கும் வேளையில், நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் இயற்கையோடு இயைந்து குழந்தைகளின் படைப்பூக்கத்தை வளர்க்க முடியும் என்கிறார் ஆசிரியர் சங்கர தேவி. புதுச்சேரியில் அபிஷேகப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இவர், கைவினைக் கலைகள், பொம்மலாட்டம் ஆகியவற்றைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு வேளையில், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு குழந்தைகளுக்கான கைவினைப் பொருட்களை உருவாக்கி வருகிறார். குழந்தைகளுக்கும் அவற்றை உருவாக்கப் பயிற்சி அளிக்கிறார்.

இதுகுறித்துப் பேசும் அவர், ''கைவினைப் பயிற்சி, குழந்தைகளின் படைப்பாற்றல் திறன் மற்றும் கை ஒத்திசைவுத் திறன் மேம்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. இவ்வாறு பயிற்சி அளிப்பதால் அவர்களின் எழுத்தாற்றலும் மேம்படுகிறது.

பெரும்பாலான தருணங்களில் இதுவரை கைவினைப் பயிற்சிக்குப் பணம் செலவிட்டு வண்ணக் காகிதங்களையும், சார்ட்டுகளையும்தான் பயன்படுத்தி வந்தோம். மரங்களை வெட்டி இவற்றை உருவாக்கி, வண்ணத்துக்காக கெமிக்கல்களையும் பூசுகின்றனர்.

இன்றைய ஊரடங்கு காலத்தில் இயற்கையில் கிடைக்கும் இலைகள் மற்றும் ஓலைகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்வதால் பணமும் மிச்சம்... சுற்றுச்சூழலுக்கும் நன்மை...

அதேபோல எவ்வளவு விலைமதிப்புள்ள பொம்மை என்றாலும், குழந்தைகளுக்கு அதுஒரு விளையாட்டுப் பொருள் மட்டுமே. விளையாடி அதைத் தூக்கிப் போட்டு, கொஞ்ச நேரத்திலேயே அடுத்த பொம்மையை நோக்கி குழந்தைகள் சென்றுவிடும்.

இயற்கைப் பொருட்களில் பொம்மைகளை உருவாக்கும்போது, அவற்றைக் குழந்தைகள் என்ன செய்தாலும் கவலைப்பட மாட்டோம். இவ்வாறான சூழலுக்கு உகந்த, இயற்கை பொம்மைகளால் குழந்தைகளுக்கு இயற்கை மீது நேசம் ஏற்படும். தாவரங்கள் பற்றிய புரிதலும் உருவாகும்.

ஊரடங்கு நாட்களில் குழந்தைகளுக்குக் காணொலி வழியே இது தொடர்பாகப் பயிற்சி அளித்து வருகிறேன்'' என்கிறார் ஆசிரியர் சங்கர தேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x