

கரோனா வைரஸ் பரவலால் ஒட்டுமொத்த உலகமும் வீடடங்கி இருக்கும் காலகட்டம் இது. இதனால் மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ளும் துறைகளில் ஒன்று கல்விப் புலம். லட்சக்கணக்கான இந்தியப் பள்ளி மாணவர்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துப்போய் நிற்கிறார்கள். இச்சூழலைச் சமாளிக்க அமெரிக்க -இந்திய திட்ட கூட்டணி மன்றம் (US-India Strategic Partnership Forum) ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
காணொலி வகுப்புகளை நடத்த கைகொடுக்கும் ஜூம் செயலியை இந்தியப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தும் திட்டம் இது. அமெரிக்க-இந்திய மன்றமும் ஜூம் செயலி நிறுவனமும் இணைந்து மத்திய அரசுடனும் மாநில அரசுகளுடனும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும் இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் இந்தச் செயலியைக் கொண்டு சென்று மெய்நிகர் வழியில் கல்வியைக் கொண்டு சேர்க்கும் திட்டம் இது.
இதன் முதல் கட்டமாக சிபிஎஸ்இ பள்ளிகள் ஜூம் செயலி வழி பாட வகுப்பு நடத்தும் முறையை இன்று தொடங்கிவைத்தன. இணைய வசதியுடன்கூடிய ஆண்ட்ராய்ட் அலைபேசி இருந்தால் போதுமானது. வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாடம் படிக்கலாம்.
இப்படி மெய்நிகர் வகுப்பில் உற்சாகமாக பாடம் கற்ற சென்னையைச் சேர்ந்த மாணவி பொன்னிலாவை அலைபேசியில் அழைத்துப் பேசினோம். தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு 9-ம் வகுப்புக்குள் கரோனா காலத்திலேயே அடியெடுத்துவைத்திருக்கிறார் பொன்னிலா. 9-ம் வகுப்பின் முதல் நாள் அவருக்குத் தன்னுடைய வீட்டிலேயே தொடங்கியது.
"எனக்கு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி நேரடியாக கத்துகிறதுதான் பிடிக்கும். இணையத்துல கல்வி தொடர்பான வீடியோக்களை பார்த்தாலும் இதற்கு ஈடாகாது. அதே நேரம் இன்ட்ராக்டிவ் லேர்னிங் ஆப் சிறப்பாக இருக்கிறது. ஆண்ட்ராய்ட் போன்லயே இந்த ஆப் பதிவிறக்கி 'ஜாயின் ய மீட்டிங்' (Join a meeting) ஆப்ஷனைத் தேர்வு செய்தால் பாடம் நடத்தும் ஆசிரியருடன் நேரலையில் பேசலாம். வகுப்பு எடுக்கிற ஆசிரியருக்கு ஒரு ஐடி இருக்கும். மாணவர்களுக்கு பாஸ்வேர்ட் தரப்படும். இதைப் பயன்படுத்தி இன்னைக்கு 9-ம் வகுப்பு முதல் நாள் பாடம் எனக்கு நடந்துச்சு. என்னுடைய வகுப்பு சக மாணவ மாணவிகள் 25 பேர் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இன்னைக்கு தமிழ், ஆங்கிலம், வேதியியல் பாடம் கத்துக்கிட்டோம்" என்றார் உற்சாகமாக.
கவனமும் எச்சரிக்கையும் தேவை
இணையம் வழி திறம்படக் கல்வி கற்கும் முறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக கற்பித்து வருபவர் புதுச்சேரியில் உள்ள சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சைமன். இவர் கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையம் வழி இலவசமாக சிறப்பு வகுப்பு நடத்தினார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்தப் பயிலரங்கில் முதலில் 1300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பதிவு செய்தனர். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் என இரு தரப்பில் இருந்தும் மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.15 வயது மதிக்கத்தக்க அந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்களிடம் அவர்களுக்கென பிரத்யேகமான அலைபேசி வைத்திருந்தார்கள். பலருடைய வாட்ஸ் அப் ஸ்டேடஸை பார்த்தால் அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் பாலியல் உணர்வு சார்ந்த பதிவுகள் அவை. ஆகவே மாணவர்களுக்கென தனியாகவும் மாணவிகளுக்கென தனியாகவும் வகுப்பெடுக்க முடிவெடுத்தேன். அதிலும் பல சிக்கல்கள் சண்டைகள் வந்து கடைசியில் 300 சொச்ச மாணவர்கள் ஒரு பேட்ச். 300 சொச்ச மாணவிகள் ஒரு பேட்ச் என பயிலரங்கம் நடத்தப்பட்டது.
படிப்பிலும் சமூகச் சூழலிலும் பின்தங்கிய மாணவர்கள் பயனடையவே இது போன்ற திட்டங்களை முன்னெடுக்கிறோம். ஆனாலும் கடைசியில் சிறப்பாக படிக்கக்கூடிய, வாய்ப்பு வசதிகள் உள்ள மாணவர்களே பயனடைகிறார்கள். எதுவாயினும் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இந்த பயிலரங்கில் ஐந்து நாட்கள் வீதம் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களைக் கற்பித்தோம். தினந்தோறும் காலை 11 முதல் மதியம் 12:30 வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முன்வைத்து முக்கிய பாடத் திருப்புதல் ஆன்லைனில் நடத்தப்பட்டது. பிறகு அப்போது படித்தவற்றை அடிப்படையாகவைத்து அசைன்மென்ட் தரப்பட்டது. அதைச் செய்து முடித்து மீண்டும் மாலை 5- 6 மணிவரை ஆன்லைனில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தப் பயிற்சி பொதுத் தேர்வுக்கான கடைசி நேர தயாரிப்பாக உதவியதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்" என்கிறார் ஆசிரியர் சைமன்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பயிற்சி
மத்திய வாரிய பாடத்திட்ட பள்ளிகளும் புதுச்சேரி போன்ற அண்டை யூனியன் பிரதேசமும் பள்ளி மாணவர்களைத் தகவமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது தமிழக பள்ளிக் கல்வித் துறை நம்முடைய மாணவர்களுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வியுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
"தமிழக அரசு பள்ளி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை கடந்த மூன்று வாரங்களாகச் செய்து வருகிறோம். அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் இதற்கான உத்தரவு கூடியவிரைவில் அளிக்கப்படும். தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை இணையதளமான http://tnschools.gov.in/ -ல் உள்ள TNTP என்ற பிரிவை இதுவரை ஆசிரியர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
தற்போது அதை மாணவர்களும் பயன்படுத்தும் விதத்தில் மாற்றிவருகிறோம். கூடுமானவரை மாணவர்கள் சுலபமாக பயன்படுத்தும் வகையில் இருக்கக்கூடிய ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்தச் சொல்கிறோம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் இந்தக் காலகட்டத்தை பயனுள்ள வகையில் கழிக்க தங்களுடைய பாடப் புத்தகத்தில் உள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்தும் இணையம் வழி பயிலலாம்" என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் தெரிவித்தார்.