நீட் பாடத்திட்டத்தில் மாற்றமா?- தேசிய தேர்வுகள் முகமை பதில்

நீட் பாடத்திட்டத்தில் மாற்றமா?- தேசிய தேர்வுகள் முகமை பதில்
Updated on
1 min read

நீட் பாடத்திட்டத்தில் மாற்றமா என்பது குறித்து தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வே நீட் தேர்வு என அழைக்கப்படுகிறது.

இத்தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கரோனா அச்சம் காரணமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நீட் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.

இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக நீட் யுஜி வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''நீட் 2020 தேர்வுக்காகத் தயாராகும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நீட் பாடத்திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

என்டிஏ எப்போதும் பாடத் திட்டத்தை முடிவு செய்வதில்லை. பாடத் திட்டம் குறித்த இணைப்பை மட்டுமே வழங்குகிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் மட்டுமே பாடத் திட்டத்தை முடிவு செய்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிடுவது மட்டுமே தேசியத் தேர்வுகள் முகமையின் பணியாகும்.

மே கடைசி வாரத்தில் நீட் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in