Published : 03 Apr 2020 04:07 PM
Last Updated : 03 Apr 2020 04:07 PM

அரசு சம்பளம் கொடுத்தும் பெற முடியாமல் 11,700 பகுதி நேர ஆசிரியர்கள் தவிப்பு:  நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

அரசு சம்பளம் கொடுத்தும் பெற முடியாமல் 11,700 பகுதி நேர ஆசிரியர்கள் தவித்து வருவதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசாணை 177 நியமனத்தின் கீழ் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் ரூபாய் 5000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்கள்.

பல்வேறு காரணங்களினால் சிலர் பணியிலிருந்து விலகிய பிறகு தற்போது 11,700 பேர் மாநிலம் முழுவதும் உடற்கல்வி, ஓவியம், இசை ஆசிரியர்களாக மாதத்திற்கு 12 நாள்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்குத் தற்போதைய சம்பளமாக ரூ.7,700 வழங்கப்பட்டுவருகிறது. சம்பளப் பணம் மாநிலத் திட்ட இயக்குநரகம் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படுகிறது.

அப்பணம் வட்டார வள மையம் மூலமாக அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) கணக்கில் வரவு வைக்கப்படும். அந்தக் கணக்கினை நிர்வகிக்கும் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு (SMC) தலைவர் ஆகிய இருவரின் கையொப்பமிட்ட காசோலையினை பகுதி நேர ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் ECS மூலமாக வழங்கிவருவது வழக்கத்தில் உள்ளது.

இம்முறை கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 144 தடை உத்தரவால் மார்ச் மாத சம்பளக் காசோலையில் கையெழுத்திடும் தலைமையாசிரியரும் SMC தலைவரும் பள்ளிக்கு வராததால் பள்ளிக்கணக்கில் சம்பளப் பணத்தினைச் செலுத்திய பிறகும் பகுதி நேர ஆசிரியர்கள் சம்பளம் வங்கியில் அவரவர் கணக்கில் செலுத்தப்படாமல் சிக்கலில் உள்ளது. இதனால் அவர்கள் நெருக்கடியான சூழலில் சம்பளமின்றித் தவித்து வருகிறார்கள்.

எனவே SMC கணக்கில் இருந்து பகுதி நேர ஆசிரியர்கள் வங்கிக் கணக்கில் சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்தும் இனிவரும் காலங்களில் வட்டார வள மையங்கள் மூலமாக பகுதி நேர ஆசிரியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கவும் ஆவன செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x