Published : 03 Apr 2020 10:02 AM
Last Updated : 03 Apr 2020 10:02 AM

குட்டிக் கதை 27: கரோனா- சொன்னா கேளுங்கப்பா!

கிஷோர் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்ததுதான் தாமதம், ஆளாளுக்கு பிலுபிலு என்று பிடித்துக் கொண்டனர்.

“டேய், அங்கேயே நில்லு, குழாய் பக்கத்துல ஹேண்ட் வாஷ் வெச்சிருக்கேன், மொதல்ல அதைத் தடவி கைகளை நல்லாத் தேய்ச்சிக் கழுவிட்டு அப்பறம் உள்ள வா” என்றார் அம்மா.

“கைகள் மட்டும் இல்லப்பா , கால்களையும் நல்லா கழுவிகிட்டு வா” என்றார் அப்பா.

“உள்ள வந்ததும் மொதல்ல நீ போட்டுட்டு இருக்கற எல்லா துணிகளையும் சோப் தண்ணியில ஊறவை” என்றாள் அக்கா.

‘என்ன கொடுமை கிஷோரு இது’ என்று தனக்குத் தானே கூறி தலையில் அடித்துக் கொண்டே, “டேய், உன் பங்குக்கு நீ ஏதாவது சொல்றது தானே?” என்று தம்பியைப் பார்த்துக் கிண்டலாகக் கேட்டான் கிஷோர்.

“யார் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்ட, அப்பறம் எதுக்கு என் எனர்ஜியை நான் வேஸ்ட் பண்ணனும்” என்று கூறிய தம்பியை கோபமாக முறைத்தான்.

“அவன் மூளையில பதியற மாதிரி நல்லா சொல்லு, எல்லாரும் சொல்றாங்களே, கொஞ்சமாவது மதிப்போம்னு நெனைக்கறானா பாரு. இவனுக்கெல்லாம் பட்டாதான் புத்தி வர போகுது பாரு” என்றார் அப்பா.

“அவன்தான் ஏதோ தெரியாம செய்யறான்னா, நீ ஏன் குழந்தைக்கு சாபம் விடற” என்று சொன்ன பாட்டியை ஓடிச் சென்று கட்டிக் கொண்டான்.

“ரொம்ப தேங்க்ஸ் பாட்டி, நீங்கதான் என் நல்ல பாட்டி” என்றான்.

“வெளிய போகாதீங்க, யாரையும் தொடாதீங்கன்னு டிவி, ரேடியோ எல்லாத்துலயும் எவ்ளோ சொல்றாங்க, அதுவும் வயசானவங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கும், அவங்களுக்கு ஈஸியா பரவும்ன்னு வேற சொல்லி இருக்காங்களே, ஆனா நீ எதையும் மதிக்காம நடக்கறயே, டிரஸ் கூட மாத்தாம ஏன்டா பாட்டியைத் தொட்டுப் பேசற?” என்றாள் அக்கா.

“அதெல்லாம் எதுவும் ஆகாது, சும்மா பயமுறுத்தாதே, எவ்வளவு நேரம்தான் வீட்டுலயே முடங்கி இருக்கறது, அதான் வெளிய போய் நண்பனின் பிறந்த நாள் பார்ட்டியில கலந்து கிட்டேன்” என்று கூலாக சொல்லிவிட்டு உள்ளே சென்றான் கிஷோர்.

கரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் கிஷோர் இப்படி வெளியே செல்வது வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சொல்வதன் முக்கியத்துவத்தை இவன் எப்போதுதான் உணரப் போகிறானோ என நினைத்தனர்.

அதற்கு பிறகு அடிக்கடி வெளியே செல்லாமல் இருந்தான் கிஷோர். ஆனாலும் சில நாட்களுக்கு ஒரு முறையாவது வெளியே சென்று விட்டு வருவான்.

“டேய், வீட்டுல இருக்கப் பிடிக்கலைன்னு வெளியே போகாத டா, கரோனாவுடைய அறிகுறி தெரிஞ்சா அப்பறம் நீ தனிமைப்படுத்தப் படுவ, கொஞ்சம் யோசிச்சு நடந்துக்கோ” என்றாள் அக்கா.

“ரொம்ப கவலைப்படாதே அக்கா, அதெல்லாம் என்னை மாதிரி இளைஞர்களுக்கு வராதாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

ஆனால் கிஷோரின் நம்பிக்கை பொய்த்து விட்டது.

ஒரு வாரத்திற்குப் பின் காய்ச்சல், இருமல், தும்மல் என வந்ததும் அனைவருக்கும் பயம் வந்தது. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். உடனே மருத்துவர்கள் அவனை தனிமைப்படுத்தி கொரோனா இருக்கிறதா என பரிசோதனை செய்து பார்த்தனர்.

அவனது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்திப் பரிசோதனை செய்தனர்.

பிறகுதான் அந்த அதிர்ச்சியான தகவல் தெரிந்தது. கிஷோருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாயிற்று. அவன் இளைஞனாக இருந்ததால் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தது. அதனால் கரோனா தாக்கத்தில் இருந்து அவனால் மீண்டு வர முடிந்தது.

ஆனால் கிஷோரின் பாட்டிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை கிஷோரால் தாங்க முடியவில்லை. “ அய்யோ! பாட்டி என்னால தான் உங்களுக்கு இது பரவிடுச்சு, , பட்டாதான் புத்தி வரும்ன்னு அப்பா சொன்னது உண்மையாயிடுச்சே, என்னை மன்னிச்சுங்க பாட்டி” என்று கூறி அழுதான் கிஷோர்.

ஆம், உண்மைதான். தீதும் நன்றும் பிறர் தர வாரா.

விழிப்போடு இருப்போம். வீட்டிலேயே இருப்போம். கரோனா பரவுவதை தடுப்போம்.

நீதி : தீமையும் நன்மையும் அடுத்தவர்களால் வருவது இல்லை. நாமே உருவாக்கிக் கொள்வதுதான்.

- கலாவல்லி அருள், தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்காலிமேடு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x