Published : 26 Mar 2020 02:02 PM
Last Updated : 26 Mar 2020 02:02 PM

மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தக் கற்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

கரோனா விடுமுறையால் வீட்டிலிருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் விஷயங்களைக் கற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''பொதுத்தேர்வுகள் மற்றும் விடைத்தாள் மதிப்பீடு பணியில் இருப்பவர்கள் தவிர இதர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, அனைத்துத் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் இந்தக் காலகட்டத்தில் பாடத் திட்டம் மற்றும் அடுத்த பருவத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அதுதவிர 2020-21 ஆம் கல்வியாண்டுக்குரிய கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்களையும் தயார் செய்யலாம்.

அவற்றுடன் நடனம், படம் வரைதல், உணவு சமைத்தல் உள்ளிட்ட தங்களுக்குப் பிடித்தமான கலையை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்கான கருத்துகளை உருவாக்க வேண்டும். இவற்றைக் கொண்டு மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டில் பயிற்சிகள் தர வேண்டும். அவர்களைப் போட்டிகளில் பங்கு பெறச் செய்தால் மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்படக்கூடும்.

இதேபோல் ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகள் எந்த நேரத்தில் அழைத்தாலும் பதிலளிக்கும் நிலையிலும், தேவை ஏற்பட்டால் உடனே அலுவலகத்துக்கு வரவும் தயாராக இருக்க வேண்டும்.

மேலும், மாவட்ட ஆட்சியர் வழங்கும் பணிகளையும் ஆசிரியர்கள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இதுதவிர, கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அறிவுறுத்தல்கள் சார்ந்து அவ்வப்போது தெரிவிக்கும் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்''.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x